டூ-வீலர் கொள்ளையனை ஓட ஓட விரட்டிப்பிடித்த போலீஸ்: கோவையில் சினிமாவை மிஞ்சிய ரியல் காட்சிகள்..!!
Author: Aarthi Sivakumar14 November 2021, 12:30 pm
கோவை: சூலூர் அருகே நீலம்பூர் பைபாஸ் சாலையில் இருசக்கர வாகன திருடர்களை இரவு ரோந்தின் போது விரட்டிப் பிடித்த சூலூர் ஆய்வாளருக்கு உயர் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.
கோவை மாவட்டம் சூலூர் காவல் நிலைய ஆய்வாளர் நேற்று நள்ளிரவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது நீலம்பூர் எல்என்டி பைபாஸ் சாலையில் சந்தேகத்துக்கிடமான இருவர் நின்று இருப்பது தெரியவந்தது.
அவர்களிடம் எதற்காக இங்கே நிற்கிறீர்கள் என கேட்டபோது திடீரென இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனர். அவர்களை ரோந்து வாகனத்தில் துரத்திச் சென்றபோது முதலிபாளையம் பிரிவு அருகே இருசக்கர வாகன திருடர்கள் வாகனத்தை போட்டுவிட்டு சாலையில் தப்பியோட முயற்சி செய்தனர்.
அப்போது ஆய்வாளர் மாதையன் ரோந்து வாகனத்தில் இருந்து இறங்கி சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் திருடர்களை ஓடி விரட்டி பிடித்தார். கட்டிப் புரண்ட இரு சக்கர வாகன திருடர்களுடன் போராடியதில் அவரது சீருடை கிழிந்தது.
அதனைத் தொடர்ந்து அங்கு வந்த போலீசாரின் உதவியுடன் இருசக்கர வாகனத்தில் அவர்கள் சூலூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த சம்பவத்தின்போது தப்பியோடிய மற்றொரு வாகன திருடனை தேடி வருகின்றனர்.
போலீசிடம் சிக்கிய நபரை விசாரித்தபோது அவர் ராமநாதபுரம் மாவட்டம் தங்கப்பா நகரைச் சேர்ந்த பழனியப்பன் மகன் ஹரிஹரசுதன் என்பது தெரியவந்தது. இவர் கோவை பகுதியில் கூலி வேலை செய்து வருவதாக தெரிவித்துள்ளார். மேலும் தப்பியோடிய மற்றொருவர் சென்னையை சேர்ந்த சங்கர் என தெரியவந்தது.
இவர்களிடமிருந்து இரண்டு ஸ்ப்ளெண்டர் பிளஸ் வாகனங்கள் கைப்பற்றப்பட்டது. தப்பியோடிய இருசக்கர வாகன திருடர்களை துரத்திப் பிடிக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், துணிச்சலுடன் செயல்பட்ட காவலருக்கு உயரதிகாரிகள் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.
0
0