விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகளை பறிமுதல் செய்த போலீசார்: வீடியோ வைரலானதால் உரிமையாளரிடம் ஒப்படைப்பு!!

Author: Aarthi Sivakumar
9 September 2021, 2:02 pm
Quick Share

தென்காசி: சாலையோரம் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சிலைகளை பறிமுதல் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

விநாயகர் சதுர்த்தி விழா நாளை கொண்டாடப்படுகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபடவும், ஊர்வலமாகச் சென்று நீர்நிலைகளில் கரைக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டு, நீர்நிலைகளில் கரைக்கலாம் என அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தென்காசி மாவட்டம் புளியங்குடியில் சாலையோரம் வடமாநிலத்தவர் ஒருவர் விநாயகர் சிலைகளை விற்பனை செய்து வந்தார். அப்போது, அந்த வழியாக ரோந்து சென்ற புளியங்குடி போலீசார் சிலைகளை பறிமுதல் செய்து காவல்துறை வாகனத்தில் ஏற்றினர். இதைப்பார்த்தவர் சிலைகளை விற்பனைக்கு தானே வைத்திருக்கிறார். ஏன் பறிமுதல் செய்கிறீர்கள் என கேட்டுள்ளனர்.

அதற்கு பதிலளித்த போலீசார், இதுதொடர்பாக காவல் ஆய்வாளரிடம் கேளுங்கள், காவல் நிலையத்தில்தான் உள்ளார் என பதிலளித்துள்ளனர்.

சிலைகளை போலீசார் பறிமுதல் செய்ததை அங்கு இருந்தவர்கள் வீடியோவில் பதிவுசெய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலானதால் பெரும் சர்ச்சை எழுந்தது. இந்நிலையில், சிலைகள் திரும்பவும் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டதாக காவல் ஆய்வாளர் ராஜாராம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஹெச்.ராஜா, தமிழக அரசு இந்துக்களுக்கு எதிரான தலிபானிய அரசு என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.இது போன்று 100 கணக்கான இடங்களில் நடந்துள்ளது. இவைகளை திரட்டி உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்புவோம் என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Views: - 287

0

0