போதையில் பைக்கை திருடிய போலீஸ் : காவலரையே சக காவலர்கள் கைது செய்த அவலம்!!

2 August 2021, 3:28 pm
Police Arrest - Updatenews360
Quick Share

திருப்பூர் : பல்லடம் அருகே குடிபோதையில் இருசக்கர வாகனத்தை பறித்து சென்ற போலீஸ்காரரை சக போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள அவிநாசிபாளையம் போலீஸ் நிலையத்தில் போலீசாக பணிபுரிபவர் ராஜேஷ். இவர் கடந்த 30ம் தேதி பல்லடம் அருகே உள்ள சிங்கனூர் அரசு மதுபான கடை முன்பு சீருடை இல்லாமல் நின்றுகொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக கட்டடத் தொழிலாளி பூவரசன் தனது இரு சக்கர வாகனத்தில் வந்துள்ளார். அவரைத் தடுத்து நிறுத்திய போலீஸ் ராஜேஷ், வண்டியின் ஆர்.சி.புக் லைசென்ஸ், எடு என மிரட்டியுள்ளார். ஆர்.சி. புக் வீட்டில் உள்ளது எனக் கூறவே வண்டியை நிறுத்திவிட்டு போய் எடுத்து வா என கூறி உள்ளார்.

இதையடுத்து இரு சக்கர வாகனத்தை அவரிடம் கொடுத்துவிட்டு நடந்து சென்று வண்டியின் ஆர்.சி. புக்கை எடுத்து கொண்டு பூவரசன் வந்துள்ளார். அங்கு வந்து பார்த்த பொழுது இருசக்கர வாகனத்துடன் போலீஸ்காரர் மாயமானது தெரிய வந்தது.

இதனால் சந்தேகம் அடைந்த பூவரசன் பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.புகாரின் அடிப்படையில் பல்லடம் போலீசார் விசாரணை செய்த பொழுது விடுமுறையில் இருந்த ராஜேஷ், சிங்கனூர் மதுபான கடைக்கு மது அருந்த வந்ததும், மதுபோதையில் இருந்த அவர் இருசக்கர வாகனத்தை பறித்து சென்றதும் தெரியவந்தது. அதனை அடுத்து திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் உத்தரவின் பேரில் அவிநாசிபாளையம் போலீஸ் ராஜேஷை பல்லடம் காவல் துறையினர் கைது செய்தனர்.

Views: - 382

1

0