வயதான தம்பதியை நடுரோட்டில் செருப்பால் அடித்த அரசு ஊழியர் : போலீஸ் பிடியில் சிக்காமல் இருக்க ஊர் ஊராக தஞ்சம்..!

22 September 2020, 1:07 pm
pondy slap - updatenews360
Quick Share

புதுச்சேரி : புதுச்சேரியில் வயதான தம்பதியை நடுரோட்டில் வைத்து செருப்பால் அடித்த அரசு ஊழியரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

புதுச்சேரி அடுத்த தட்டாஞ்சாவடி பகுதியை சேர்ந்தவர் சுப்புராயன் (65). இவரது மனைவி லட்சுமி (59). இருவரும் ஜெயாநகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி, செக்யூரிட்டி வேலை செய்து வருகின்றனர். அடுக்குமாடி குடியிருப்பு அருகே, ராமலிங்கநகரை சேர்ந்த சரவணன் (55) என்ற அரசு ஊழியர் மாடுகள் வளர்த்து வருகிறார்.

இந்த நிலையில் மாடுகள், அடுக்குமாடி குடியிருப்பிற்குள் வருவதாக சரவணனிடம் கணவன், மனைவி இருவரும் கேட்டனர். இதனால், ஆத்திரமடைந்த சரவணன், வயதானவர்கள் என்று கூட பாராமல் நடுரோட்டில் வைத்து வயது முதிர்ந்த தம்பதியினர் இருவரையும் சரமாரியாக செருப்பால் அடித்துள்ளார். இந்த சம்பவம் அங்குள்ள சி.சி.டி.வி.யில் பதிவாகியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், சரவணன் தலைமறைவாகியுள்ளார். மேலும், முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்ய இருப்பதால், அதுவரையில் போலீஸ் பிடியில் சிக்காமல் இருக்க, ஊர் ஊராக உள்ள தனது உறவினர்களின் வீடுகளுக்கு சென்று தஞ்சம் புகுந்து வருவதாகக் கூறப்படுகிறது. போலீசாரால் தேடப்பட்டு வரும் சரவணன், புதுச்சேரி அரசு பொதுபணித்துறையில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 8

0

0