40 வருடமாக வெளிச்சத்திற்காக போராடும் ஏழைக் குடும்பம்!! ஒளி இல்லாமல் பட்டதாரியான மகள்கள்!!
29 January 2021, 12:21 pmகன்னியாகுமரி : 40 ஆண்டுகளாக மின்னொளிக்காக ஏங்கும் ஏழை குடும்பம் மின் விளக்கை அமைத்து தர அரசுக்கு தொடர் கோரிக்கையை விடுத்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் மருதூர்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் பிரான்சிஸ். தென்னை ஏறும் தொழிலாளியான இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அமலபுஷ்பம் என்பவருக்கும் கடந்த 42 வருடங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில் அந்த தம்பதியர் இருவரும் 7-பெண் குழந்தைகள், ஒரு மூதாட்டி என 10-பேராக தனக்கு சொந்தமான குடிசை வீடு ஒன்றில் வாழ்ந்து வந்தனர். வீட்டிற்கு செல்ல சாலையில் இருந்து சுமார் 200-மீட்டர் தூரத்திற்கு ஒற்றையடி பாதையிலேயே பயணித்து செல்ல வேண்டும்.
நச்சு விலங்குகள் நடமாடும் அந்த பகுதியில் இரவு நேரம் அச்சத்துடனே மண்ணெண்ணை விளக்கு வெளிச்சத்தில் வசித்து வந்த பிரான்ஸ்சிஸ்-அமலபுஷ்பம் தம்பதியர் பெண் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக அதே இடத்தில் 30-வருடங்களுக்கு முன் ஏழ்மையிலும் சிறுக சிறுக சம்பாதித்து சேர்த்த பணத்தில் சிறிய வீடு ஒன்றை கட்டி குடி புகுந்துள்ளனர்.
அப்போதே அந்த வீட்டிற்கு மின் இணைப்பு கோரி மின் வாரியத்திலும் விண்ணப்பித்துள்ளனர். ஆனால் மின்வாரிய அலுவலக அதிகாரிகளோ ஒற்றையடி பாதையையும் சாலைக்கும் வீட்டிற்கும் இடையே உள்ள தொலைவையும் காரணம் காட்டி மின் இணைப்பு வழங்க இயலாது என மறுத்து விட்டனர்.
மின் இணைப்பு இல்லாத நிலையிலும் வறுமையிலும் தன் மகள்களை பிரான்சிஸ் தொடர்ந்து படிக்க வைத்துள்ளார். ஏழு பெண் குழந்தைகளும் தந்தையின் ஆசையை நிறைவேற்ற தடைகளையும் தூக்கி எறிந்து மண்ணெண்ணை விளக்கு வெளிச்சத்திலும் ஆர்வமாக படித்து வந்தனர்.
மகள்களின் ஆர்வத்தை பார்த்து ஆச்சரியமடைந்த பிரான்சிஸ் தனது மகள்களின் ஆர்வத்திற்கு ஊக்கமளிக்க மீண்டும் மின் இணைப்பு பெறுவதற்கான முயற்சியை கையிலெடுத்தார். அதற்காக பஞ்சாயத்து அலுவலகம், ஆட்சியர் அலுவலகம், சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் என ஒவ்வொரு அலுவலகமாக ஏறி இறங்க அப்போதும் அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
வறுமையிலும் ஆர்வமுடன் படிக்கும் இந்த பெண் குழந்தைகளுக்கு எப்படியாவது ஒரு மின் இணைப்பு பெற்று தர வேண்டும் என அவர்களின் ஆசிரியர்களும் களமிறங்கி பல முயற்சிகள் மேற்கொண்டும் பலனளிக்காத நிலையில் மண்ணெண்ணை விளக்கு வெளிச்சத்திலேயே கடும் முயற்சியில் படித்த ஏழு பெண் குழந்தைகளும் ஒவ்வொருவராக மேல் படிப்பிற்கு செல்ல தொடங்கினர்.
அவர்கள் தொடர் கோரிக்கை மனுக்களையும் அனுப்பவே ஒக்கி புயலின் போது நேரடியாக மாணவிகளின் வீட்டை ஆய்வு செய்த அப்போதய மாவட்ட ஆட்சி தலைவர் சஜ்ஜன் சிங் சவான் உடனடியாக மின் இணைப்பு வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதியளித்து சென்றுள்ளார். ஆனால் இன்றளவும் மின் இணைப்பு வழங்கப்படவில்லை.
7-பெண் பிள்ளைகளும் வெவ்வேறு துறைகளில் பட்டம் பெற்று பட்டதாரி ஆன நிலையில் தற்போது 4-பெண்களுக்கு திருமணம் ஆன நிலையில் தற்போது பிரான்சிஸ் தனது மனைவி மனைவியின் தாயார், இளைய மகள்களான பட்டதாரியான சுகிர்தா, சிந்து, பிந்து ஆகியோருடன் வசித்து வருகிறார்.
மூன்று மகள்களும் மண்ணெண்ணை விளக்கு வெளிச்சத்தில் படித்து போட்டி தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். இந்த நிலையில் இரண்டு தலைமுறையாக மின்சாரமின்றி மண்ணெண்ணை விளக்கு வெளிச்சத்திலேயே எங்களை படிக்க வைத்து ஆளாக்கிய தாய் தந்தையரின் மின் இணைப்பு கனவை நனவாக்க அவர்களின் இறுதி காலத்திலேயாவது வீட்டில் ஒற்றை மின் விளக்காவது அமைத்து தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென அரசுக்கு கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.
0
0