பாஜக பிரமுகர் கல்யாணராமன் ஜாமீன் மனு தாக்கல்: பதிலளிக்க காவல்துறைக்கு உத்தரவு

Author: Udhayakumar Raman
23 October 2021, 7:47 pm
Quick Share

சென்னை: பாஜக பிரமுகர் கல்யாணராமன் தாக்கல் செய்த ஜாமீன் மனுவுக்கு பதிலளிக்கும்படி காவல் துறைக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் ஜனவரி மாதம் பாரதிய ஜனதா கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில், அக்கட்சியின் நிர்வாகி கல்யாணராமன் கலந்துகொண்டு உரையாற்றினார்.அதில், நபிகள் நாயகம் குறித்து அவதூறான வகையில் பேசியதை கண்டித்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இஸ்லாமியர்கள் தொடர் போராட்டத்தை கையிலெடுத்தனர். இந்த தொடர் போராட்டம் காரணமாக கல்யாணராமனை போலீசார் கைது செய்தனர். தமிழகம் முழுவதும் அவர் மீது புகார்கள் குவிந்ததால் அவர் மீது குண்டர் சட்டம் உட்பட பல்வேறு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கோவை மாவட்ட எஸ்.பி.யின் பரிந்துரையின் பேரில் கல்யாணராமனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

இதனையடுத்து அவர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.இந்த வழக்கு குறித்த விசாரணையில் குண்டர் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. இதைத்தொடர்ந்து, முதலமைச்சர் மு.க ஸ்டாலின், முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் மருத்துவர் ஷர்மிளா ஆகியோரை சமூக வலைதளத்தில் அவதூறாக கருத்து தெரிவித்த புகாரின் அடிப்படையில் பாஜக பிரமுகர் கல்யாணராமன் நள்ளிரவில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், கல்யாணராமன் சார்பில் சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த ஜாமீன் மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

இதனை அடுத்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், இரண்டு மாதங்களுக்கு முன் அரசியல் உள்நோக்கத்துடன் அளிக்கப்பட்ட புகார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தனது பதிவுகளால் பொது அமைதிக்கு எந்த குந்தகமும் ஏற்படாத நிலையில், தன்னை அழைத்து விசாரிக்காமல் கைது செய்துள்ளதாக தெரிவித்திருந்தார்.இந்த நிலையில் மனு முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி செல்வகுமார் முன் இன்று விசாரணைக்கு வந்த போது, மத்திய குற்றப்பிரிவு தரப்பில் அஜரான அரசு வழக்கறிஞர் பதிலளிக்க கால அவகாசம் கோரியதை ஏற்று, அக்டோபர் 26ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை அன்றைய தேதிக்கு தள்ளிவைத்தார்.

Views: - 170

0

0