கோவில்பட்டி கிளைச்சிறையில் இருந்து கைதி தப்பியோட்டம் : பொதுமக்கள், போலீசார் விரட்டி பிடித்தனர்!!

2 November 2020, 2:42 pm
Prisoner Escape - Updatenews360
Quick Share

தூத்துக்குடி : கோவில்பட்டி கிளைச்சிறையில் செல்போன் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு விசாரணை கைதியாக இருந்த சக்திவேல் என்பவர் தப்பியோடிய நிலையில் சிறைக்காவலர்கள், போக்குவரத்து காவலர்கள், பொதுமக்கள் உதவியுடன் சுற்றி வளைத்து பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கூட்டம்புளியை சேர்ந்த மூக்காண்டி என்பவரது மகன் சக்திவேல். இவர் கடந்த மாதம் 14ந்தேதி செல்போன் திருட்டு வழக்கு ஒன்றில் ஏரல் காவல் நிலைய போலீசாரால் கைது செய்யப்பட்டு கோவில்பட்டி கிளைச்சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் இன்று காலையில் கிளைசிறையில் இருக்கும் மரத்தின் மீது ஒருவர் வேகமாக ஏறுவதை பார்த்த சக கைதிகள் கூச்சலிட்டுள்ளனர். இதனை தொடர்ந்து சிறைக்காவலர்கள் விரைந்து வந்து பார்த்த போது விசாரணை கைதியாக இருந்த சக்திவேல் மரத்தின் மேல் ஏறி சிறை சுவற்றில் குதித்து தப்பி ஓடுவதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

இதையெடுத்து சிறைக்காவலர்கள் வெளியே ஓடிவந்து சக்திவேலை பிடிக்க முயற்சி மேற்க்கொண்டனர். அவர்களுடன் அப்பகுதியில் இருந்த போக்குவரத்து காவலர்கள், நீதிமன்ற வளாகம் அருகே இருந்த மைதானத்தில் விளையாடி கொண்டிருந்த பொதுமக்களும், அருகில் கட்டிட வேலைபார்த்து கொண்டு இருந்தவர்களும் சிறைக்காவலர்களுடன் இணைந்து சக்திவேலை பிடிக்க முயன்றனர்.

சிறை சுவற்றில் ஏறி அருகில் உள்ள போக்குவரத்து உதவி ஆய்வாளர் அலுவலகம் மற்றும் ஆதிதிராவிட நலத்துறை தனி தாசில்தார் பிரிவு இடையேயுள்ள கட்டிடத்தில் குதித்த சக்திவேல் அங்கிருந்து தப்பிக்க முயன்ற போது அனைவரும் சுற்றிவளைத்து பிடித்தனர்.

இதன் பின்னர் மீண்டும் சக்திவேல் சிறைக்குள் அடைக்கப்பட்டார். தப்பி ஓடும் போது சிறைச்சாலை சுவற்றில் உள்ள கண்ணாடி குத்தியதில் சக்திவேலுக்கு லேசான காயம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

ஏற்கனவே காவல்துறையினரால் தாக்கப்பட்டு உயிரிழந்த சாத்தான்குளத்தினை சேர்ந்த ஜெயராஜ், பென்னிக்கஸ் இருவரும் கோவில்பட்டி கிளைச்சிறையில் அடைக்கப்பட்டு உயிரிழந்தனர். இந்த வழக்கு இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பினை ஏற்படுத்திய நிலையில் தற்பொழுது அதே கிளைச்சிறையில் கைதி தப்பியோடியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 21

0

0