“படிப்பை தொடர முடியல ப்ளிஸ் டிசியை கொடுங்க“ : கெஞ்சிய மாணவனிடம் ரூ.8 லட்சம் கேட்ட வேளாண் கல்லூரி!!

Author: Udayachandran
5 October 2020, 1:11 pm
College Studeent Issue - updatenews360
Quick Share

திருச்சி : தந்தை இறந்ததால் வேளாண்மை படிப்பைத் தொடர முடியாததால் டிசி கேட்ட மாணவனிடம், கல்லூரி நிர்வாகம் ரூ. 8 லட்சம் கேட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், ஒட்டபிரகாரம் வட்டம், அக்கநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த நவநீதகோபாலகிருஷ்ணனின் மகன் சூரியபிரகாஷ் (வயது 18). இவர் பட்டியல் இன வகுப்பைச் சேர்ந்தவர். விவசாய கூலித் தொழிலாளியான நவநீதிகிருஷ்ணன் தனது மகன் சூரியபிரகாஷை திருச்சி சிறுகனூர் பகுதியில் உள்ள நாளந்தா வேளாண்மை கல்லூரியில் 2018 – 19 ம் ஆண்டில் பிஎஸ்சி அக்ரி முதலாம் ஆண்டு சேர்த்தார்.

அப்போது ரூ.1லட்சத்து 85 ஆயிரம் கட்டி அதே கல்லூரியில் விடுதியில் தங்கி கல்வி பயின்றார். அப்போது கல்லூரி நிர்வாகம் பட்டியல் இன மாணவர் என்பதால் அரசு உதவித்தொகையிலேயே கல்வி பயிலலாம் எனக் கூறியுள்ளனர். முதலாம் ஆண்டு கல்வி பயின்ற மாணவன் சூரியபிரகாஷ் இரண்டாம் ஆண்டில் கல்வி பயிலும் போது, மீண்டும் ரூ.1 லட்சத்து 85 ஆயிரம் பணம் கட்ட வற்புறுத்தியுள்ளனர்.

கொரோனா பரவல் காரணமாக போதிய வருவாய் இல்லாத நிலையில் மன உலைச்சலான மாணவனின் தந்தை மாரடைப்பால் அண்மையில் உயிரிழந்தார். தந்தை உயிரிழந்ததால் படிப்பைத் தொடர முடியாத நிலையில் மாணவனும், அவனது தாய் ராமஜெயந்தியும், கல்லூரிக்கு வந்து குடும்ப சூழ்நிலையினை கூறி மாற்றுச் சான்றிதழ் கொடுத்தால், தூத்துக்குடி பகுதியில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கல்வி பயில்வதாக கூறி சான்றிதழைக் கேட்டுள்ளார்.

கல்லூரி நிர்வாகம் மூன்றாண்டுக்கும் செலுத்த வேண்டிய ரூ.8 லட்சம் பணத்தினை செலுத்தினால் தான் மாற்றுச் சான்றிதழ் வழங்க முடியுமென கூறினர். இது குறித்து சிறுகனூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. இந்தநிலையில் தனது மகனுக்கு மாற்றுச்சான்றிதழ் கொடுக்க மறுத்தால் கல்லூரி நுழைவு வாயிலிலேயே , தானும் தனது மகனும் மண்ணெண்ணெய் ஊற்றித் தீயிட்டுக் கொண்டு சாவதனை தவிர வேறு வழியில்லை என்றார் மாணவனின் தாய் ராமஜெயந்தி.

இது குறித்து கல்லூரி நிர்வாகத்திடம் கேட்ட போது, மேனேஜ்மென்ட் கோட்டாவில் தான் மாணவன் சூரியபிரகாஷ் சேர்ந்தார். கல்லூரிக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை ரூ. 8 லட்சம் செலுத்தினால் அவரது மாற்றுச்சான்றிதழை செலுத்த தயாராக உள்ளோம் என்றனர்.

கடந்தாண்டு இக்கல்லூரியில் போதிய மின்சார வசதி இல்லை, குடிநீர் மற்றும் கழிவறை இல்லை, முறையான ஆசிரியர்கள் , செய்முறைக்கு தேவையான விவசாய பண்ணை தோட்டங்கள் இல்லாததால், கடந்த ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகே பாரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முதலாண்டு மாணவன் மனோஜ்குமார் உள்ளிட்ட 3 மாணவர்கள் 2மாணவிகள் இக்கல்லூரியில் படிக்க விருப்பமின்றி தலா ரூ 1 லட்சம் கல்லூரிக்கு செலுத்தி விட்டு மாற்றுச்சான்றிதழ் வாங்கிச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 50

0

0