கோவை விடுதியில் ரகசிய அறையில் விபச்சாரம் : பெண்ணை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய 2 பேர் கைது!!
20 August 2020, 11:04 amகோவை : கோவையில் ரகசிய அறையில் வைத்து பெண்ணை விபச்சாரத்தில் ஈடுபட்டுத்திய இருவரை மேட்டுப்பாளையம் போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை மேட்டுப்பாளையத்தை அடுத்த கல்லாறு பகுதியில் உள்ள விடுதி ஒன்றின் ரகசிய அறையில் பெண்ணை அடைத்து வைத்து விபச்சாரம் நடப்பதாக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இந்த தகவலின் பேரில், உரிய நடவடிக்கை எடுக்க மேட்டுப்பாளையம் போலீசுக்கு காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார். அதன் பேரில் நேற்று மாலை ஊட்டி சாலையில் உள்ள சரண்யா லாட்ஜ் என்ற விடுதிக்கு போலீசார் சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்குள்ள ரகசிய அறை ஒன்றில் வைத்து விபச்சாரம் நடப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அந்த விடுதியை மாதம் ரூ.50 ஆயிரத்திற்கு கான்டிராக்ட் எடுத்து விபச்சாரம் செய்து வந்த ஆனைகட்டி பகுதியை சேர்ந்த மகேந்திரன் (வயது 46), மற்றும் கணேசன் (வயது 36) ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
மேலும், விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட பெங்களுரை சேர்ந்த 22 வயது பெண் மீட்கப்பட்டு காப்பகத்திற்கு அனுப்பப்பட்டார்.