மாநகராட்சி பள்ளி மைதானத்தை ஆக்கிரமிக்கும் சூயஸ் நிறுவனம்: எதிர்ப்பு தெரிவித்து மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்..!!

Author: Aarthi Sivakumar
6 January 2022, 6:50 pm
Quick Share

கோவை: ராமநாதபுரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி மைதானத்தை ஆக்கிரமித்து சூயஸ் குடிநீர் திட்டத்திற்காக தண்ணீர் தொட்டி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் சூயஸ் குடிநீர் திட்டத்தின் கீழ் குழாய்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்துக்காக ராமநாதபுரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் குடிநீர் தொட்டி அமைப்பதற்காக மரங்கள் வெட்டப்பட்டு ஜேசிபி எந்திரங்கள் உதவியுடன் பள்ளம் தோண்டப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பள்ளி மைதானத்தில் குடிநீர் தொட்டி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பள்ளி மாணவர்கள் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தினர் இணைந்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது சுயஸ் குடிநீர் திட்டத்திற்காக பள்ளி மைதானத்தை கையகப்படுத்தி குடிநீர் தொட்டி அமைப்பதற்கான பணிகளை மேற்கொண்டு வரும் சூயஸ் நிறுவனம் மற்றும் கோவை மாநகராட்சியை கண்டித்து பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

தொடர்ந்து பள்ளி வளாகத்தில் உள்ள மைதானத்தை பாதுகாக்க, தனியார் நிறுவனத்தில் குடிநீர் தொட்டி அமைக்கும் திட்டத்தை கைவிடக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Views: - 370

0

0