புதுச்சேரி அமைதிப் பூங்காவாக உள்ளது : முதலமைச்சர் நாராயணசாமி உரை.!!
15 August 2020, 3:21 pmபுதுச்சேரி : நாட்டின் 74வது சுதந்திர தினத்தையொட்டி புதுச்சேரி இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் மாநில முதலமைச்சர் நாராயணசாமி தேசியக் கொடியை ஏற்றி வைத்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
நாட்டின் 74வது சுதந்திர தினவிழா நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதுச்சேரி அரசு சார்பில் சுதந்திர தின விழா இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் கொண்டாடப்பட்டது. இதில் மாநில முதலமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டு தேசியக்கொடியை ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
தொடர்ந்து பள்ளி, காவலர்கள் மற்றும் வீர செயல் புரிந்தவர்களுக்கு கேடயம், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். கொரோனா பரவலை தடுக்கும் வகையில் இந்த ஆண்டு பள்ளி மாணவ, மாணவிகளின் அணிவகுப்பு மற்றும் கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டது மேலும் பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை.
நிகழ்ச்சியில் சபாநாயகர் சிவகொழுந்து, துணை சபாநாயகர் பாலன், சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமை செயலர், மாவட்ட ஆட்சியர், துறை செயலர்கள் முகக் கவசம் அணிந்துகொண்டு பங்கேற்றனர்.
முன்னதாக சுதந்திர தின உரையாற்றிய முதலமைச்சர் நாராயணசாமி, காவல்துறையானது குற்றங்களை கண்டறிந்து அவற்றை கட்டுபடுத்துவதில் தொடர்ந்து திறம்பட செயலாற்றி வருவதால் மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு பேணப்பட்டு அமைதி பூங்காவாக திகழ்வதாகவும் புதுச்சேரி மற்றும் கடலூர் இடையே இரயில் போக்குவரத்திற்கான திட்டம் மறு ஆய்வு செய்யப்பட்டு தயாரிக்கப்பட்ட செயல்திட்டத்திற்கு தெற்கு ரயில்வே பிரிவு ஒப்புதல் வழங்கியுள்ளது என்றார்.
மேலும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அரசு இயந்திரம் மட்டும் இயங்கினால் போதாது என்றும் மக்களும் தங்கள்து சமூக கடமையை உணர்ந்து அரசோடு ஒத்துழைக்க வேண்டும் எனவுன் வேண்டுகோள் விடுத்தார்.