அரசு விடுமுறை பட்டியலில் இருந்து தொழிலாளர் தினம், காந்தி ஜெயந்தி நீக்கம் – அரசின் அறிவிப்பால் சர்ச்சை

Author: Udhayakumar Raman
13 October 2021, 8:32 pm
Puducherry Corona - updatenews360
Quick Share

புதுச்சேரி: ஆண்டுதோறும் அறிவிக்கப்படும் மே 1 தொழிலாளர் தினம் மற்றும் அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி அரசு விடுமுறையை வரும் 2022ம் ஆண்டு பட்டியலில் இருந்து புதுச்சேரி அரசு ரத்து செய்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆண்டுதோறும் அரசு விடுமுறை நாட்கள் பட்டியலை புதுச்சேரி அரசு வெளியிடும், இந்நிலையில் 2022ம் ஆண்டு அரசு விடுமுறை நாட்கள் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த பட்டியலில் தொழிலாளர் தினமான மே 1ம் தேதி மற்றும் அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி அன்று விடுமுறை அளிக்கவில்லை, இது புதுச்சேரி மக்களிடையே குழப்பத்தையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது, மேலும் அரசின் இச்செயலுக்கு பல்வேறு தொழிற்சங்கத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். தொழிலாளர்கள் போராடி பெற்ற உரிமைகளை கொண்டாடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மே 1ம் தேதி தொழிலாளர் தினமாக அறிவிக்கப்பட்டு அன்று நாடு முழுவதும் விடுமுறை அளிக்கப்படுகிறது, இந்நிலையில் 2022ம் ஆண்டு விடுமுறை தின பட்டியலில் தொழிலாளர் தினமான மே 1ம் தேதி அன்று விடுமுறை அளிக்காதது தொழிலாளர்களுக்கு எதிராக அரசு செயல்படுவதற்கு சான்று என்றும், காந்தி ஜெயந்தி விடுமுறையாயும் நீக்கம் செய்து உள்ளது வருத்தம் அளிக்கிறது என தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

எனவே கடந்த ஆண்டுகளை போல 2022ம் ஆண்டிலும் மே 1ம் தேதி தொழிலாளர் தின விடுமுறை, காந்தி ஜெயந்தி விடுமுறை அறிவிக்க வேண்டுமெனவும் கூறுகின்றனர், இதுகுறித்து உள்துறை செயலர், துணைநிலை ஆளுநருக்கு ஏஐடியுசி தொழிற்சங்கம் சார்பில் கடிதமும் அனுப்பப்பட்டுள்ளது. புதுச்சேரியில் மே 1, அக்டோபர் 2 ஆகிய இருநாட்கள் ஞாயிற்று கிழமைகளில் வருவதால் அரசு விடுமுறை பட்டியலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், துணைநிலை ஆளுநர் உத்தரவுப்படி இவ்வுத்தரவு வெளியிடப்பட்டுள்ளதாகவும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு அரசு விடுமுறை நாட்கள் அதிகளவாக 16 தான் அறிவிக்க முடியும் என்பதால், 2022ம் ஆண்டு ஞாயிற்றுக்கிழமைகளில் வரும் மே 1 தொழிலாளர் தினம் மற்றும் அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி ஆகிய இரு நாட்கள் அரசு விடுமுறை நாட்கள் பட்டியலில் சேர்க்கப்படவில்லை எனவும், இதேபோல் ஒவ்வொரு ஆண்டும் சில விடுமுறைகள் ஞாயிறன்று வந்தாலும் இதேபோல் நடவடிக்கை எடுப்பது வழக்கம் என்று அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Views: - 228

0

0