டிரான்ஸ்பர் வாங்கிய அரசு அதிகாரி வீட்டில் திடீர் சோதனை….சிக்கியது இத்தனை லட்சமா?….

2 November 2020, 5:23 pm
pathiram - updatenews360
Quick Share

சேலத்தில் பணியிட மாறுதலாகி செல்லும் பத்திரப்பதிவுத்துறை மண்டல துணைத் தலைவர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய திடீர் சோதனையில் பல லட்சம் ரொக்கம் கைப்பற்றப்பட்டது.

பத்திரப் பதிவுத்துறையின் சேலம் மண்டல துணைத் தலைவராக பணியாற்றி வந்தவர் வி.ஆனந்த். இவர் கடலூருக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டிருந்தார். சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய சேலம் மண்டலத்தின் கட்டுப்பாட்டில் 70 சார் பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன.

இந்நிலையில், மண்டல துணைத் தலைவராக பணியாற்றி வந்த வி.ஆனந்த்-ன் பணியிட மாறுதலையடுத்து, அவரது வீட்டில் பிரிவு உபசார விழா நடத்தியுள்ளார். அந்த விருந்தில், பத்திரப்பதிவு துறையை சார்ந்த பல அலுவலர்கள் கலந்து கொண்டு, அன்பளிப்பாக தங்கம், ரொக்கம் என பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

தகவலையடுத்து, சேலம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை ஏடிஎஸ்பி சந்திரமவுலி தலைமையிலான போலீசார், நேற்று சேலம் ஃபேர்லேண்ட்ஸ்-ல் உள்ள ஆனந்தின் இல்லத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். சோதனையின் முடிவில் சுமார் ரூ.13 லட்சம் மதிப்புள்ள 34 தங்க காசுகள், ரூ.3.20 லட்சம் ரொக்கம், தங்க ஆபரணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.

pathira pathivu - updatenews360

இதுதொடர்பாக, பத்திரப்பதிவுத் துறை மண்டல துணைத்தலைவர் ஆனந்த் மீது, சேலம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலத்தில் கடந்த வாரத்தில் சார்பதிவாளர் அலுவலகம், சில நாட்களுக்கு முன் வட்டார போக்குவரத்து மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்திய நிலையில், தற்போது பதிவுத்துறை மண்டல அலுவலர் வீட்டிலும் சோதனை நடத்தியிருப்பது அதிகாரிகள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 25

0

0