முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் ரெய்டு: 52 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை..!!
Author: Aarthi Sivakumar10 August 2021, 8:20 am
கோவை: அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்த புகாரில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருவதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதிமுக ஆட்சியின் போது உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்தவர் எஸ்.பி.வேலுமணி. அப்போது, அவர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும், வருமானத்தை மீறி சொத்து சேர்த்ததாகவும் புகார் எழுந்தது. அரசின் ஒப்பந்த பணிகளை பெற்றுத் தருவதாக, 1.20 கோடி ரூபாய் மோசடி செய்து விட்டதாக, முன்னாள் அமைச்சர் வேலுமணி மீது திருவேங்கடம் என்பவர் நேற்று போலீசாரிடம் புகார் அளித்தார்.
இந்நிலையில், வேலுமணி தொடர்புடைய 52 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். கோவை குனியமுத்தூரில் உள்ள எஸ்.பி.வேலுமணி வீட்டில் 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் காலை 6 மணி முதல் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், எஸ்.பி.வேலுமணி மீது சொத்துக் குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரது பங்குதாரர்கள் 16 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை கோடம்பாக்கத்தில் வேலுமணிக்கு நெருங்கிய நபர் வீடுகளில் சோதனை நடக்கிறது. சென்னையில் 15 இடங்களிலும், காஞ்சிபுரம், திண்டுக்கல்லில் வேலுமணிக்கு தொடர்புடைய இடங்களிலும் சோதனை நடக்கிறது. ஏற்கனவே முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
0
0