ரயில்வே ஸ்டேஷன் சூப்பிரண்டை கார் ஏற்றி கொலை : மேலும் ஒரு முக்கிய குற்றவாளி கைது..! வழக்கில் திடீர் திருப்பம்…

Author: kavin kumar
29 January 2022, 1:39 pm
Quick Share

தூத்துக்குடி : ஸ்ரீவைகுண்டம் அருகே ரயில்வே ஸ்டேஷன் சூப்பிரண்டை கார் ஏற்றி கொலை செய்துவிட்டு விபத்து நாடகமாடிய வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி மாவட்டம், கேடிசிநகரைச் சேர்ந்தவர் செந்தாமரைகண்ணன் (56). இவர் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள புதுக்குடி ரயில்வே ஸ்டேஷனில் கண்காணிப்பாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 16.01.2022 அன்று ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள புளியங்குளம் பகுதியில் பணிமுடித்து விட்டு தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்னால் வந்த கார் அவரை இடித்து விட்டு நிற்காகாமல் சென்றுவிட்டது. இதில் படுகாயமடைந்த செந்தாமரைகண்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

இந்த சம்பவத்தில் தொடர்புடைய காரை போலிசார் தேடி வந்தனர். இந்த நிலையில் காரில் வல்லநாடு மகேஷ், கலியாவூர் சுடலைமணி, மூலிக்குளம் ஜெகன் பாண்டியன், பக்கப்பட்டி கந்தகுமார், மார்த்தாண்டம், ஆகிய 5 பேரும் செந்தாமரைக் கண்ணனை கொலை செய்யவேண்டும் என்ற நோக்கத்தில் திட்டம்போட்டு கடந்த 16ஆம் தேதி அன்று இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தவரை வாகன விபத்தில் இறந்ததாக கருதவேண்டும் என்று அவர் மீது தங்களது காரை ஏற்றி கொலை செய்துவிட்டு நிற்காமல் சென்றுள்ளது தெரியவந்துள்ளது.

இதில் நேற்று மகேஷ் மற்றும் சுடலைமணியை போலீசார் கைது செய்து, கொலைக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர். விபத்தில் கொலை செய்யப்பட்ட செந்தாமரைக்கண்ணன் என்பவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த ஆலிவர் மகன் சாம்ராட் என்பவரது குடும்பத்தாருக்கும் கடந்த 15 வருடங்களுக்கு முன்பு நாசரேத்தில் நிலப்பிரச்சனை இருந்து வந்திருக்கிறது. இந்நிலையில் இந்த 5 பேருடன் சாம்ராட் என்பவர் கோவாவிற்கு சுற்றுலா சென்றபோது கடந்த 04ம் தேதி அன்று சாம்ராட் என்பவர் கோவாவில் ரயில் விபத்தில் மரணமடைந்துள்ளார்.

இதையறிந்த செந்தாமரைக்கண்ணன் சாம்ராட் இறந்தது குறித்து சமூக வலைதளங்களில் “இறைவனுடைய தண்டனை” என்று பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்த இந்த 5 பேரும் செந்தாமரைக்கண்ணனை கொலை செய்து விட்டு தப்பிவிடுவதற்காக வாகன விபத்து நடந்தது போல காண்பித்து தங்களது காரை ஏற்றி கொலை செய்ததும் தெரியவந்துள்ளது.  இந்த சம்பவத்தில் நேற்று இரண்டு பேரை கைது செய்த போலீசார் இன்று பக்கப்பட்டியைச் சேர்ந்த கந்தகுமார் என்பவரை தூத்துக்குடியில் கைது செய்து செய்துங்கநல்லூர் காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 1487

0

0