அடிக்குது மழை.. தயார் நிலையில் மீட்புப் படையினர்!

Author: Hariharasudhan
12 October 2024, 3:35 pm

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக உள்ள நிலையில், அடுத்த ஏழு நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை: இன்றைய நிலவரப்படி, தமிழகத்தில் பொதுவாக அநேக இடங்களிலும், புதுச்சேரியிலும் மழை பெய்துள்ளது. காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. அதிகபட்ச வெப்பநிலையாக தொண்டியில் 34.2° செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையாக ஈரோட்டில் 17.5° செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.

அடுத்த ஏழு நாட்களுக்கு,மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்ததாழ்வு பகுதியானது, இன்று (12-10-2024) காலை 08.30. மணி அளவில் அதே பகுதியில் நிலைகொண்டுள்ளதால், இது மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகிற 13ஆம் தேதி காலை வாக்கில் மத்திய அரபிக்கடல் பகுதியில் காற்றழுத்ததாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும்.எனவே, இன்று முதல் 18ஆம் தேதி வரை தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

குறிப்பாக, இன்று (அக்.12) கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில், காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. அதேபோல், நாளை (அக்.13) திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

தொடர்ந்து நாளை மறுநாள் (அக்.14), விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில், காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

தொடர்ந்து வருகிற 15ஆம் தேதி செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

இதையும் படிங்க: பேய் மழை.. அரை நூற்றாண்டுக்குப் பின் நீரால் ததும்பும் சஹாரா

மேலும், 16ஆம் தேதி வேலூர், இராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. மேலும், 17ஆம் தேதி நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா , வங்கக்கடல் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் இன்று முதல் வருகிற 16ஆம் தேதி வரை சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே, இந்த நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், நேற்று காரைக்கால், சிவகங்கை பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியதால் மீட்புக் குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாக அம்மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!