பேய் மழை.. அரை நூற்றாண்டுக்குப் பின் நீரால் ததும்பும் சஹாரா
Author: Hariharasudhan12 அக்டோபர் 2024, 1:42 மணி
மொராக்கோவில் பெய்த எதிர்பாராத கனமழையால் சஹாரா பாலைவனத்தில் உள்ள பல இடங்களில் நீர் நிரம்பி காணப்படுகிறது.
மொராக்கோ: உலகப் புகழ் பெற்ற சஹாரா பாலைவனம் மொராக்கோவில் உள்ளது. இந்த இடம் எப்போதும் வெப்பம் நிறைந்து நீர் ஆதாரங்கள் இன்றியே காணப்படுகிறது. மேலும், புவி வெப்பமயமாதலால் சஹாரா பாலைவனம் மிகப்பெரிய சேதத்தை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக மொராக்கோ வானிலை மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், கடந்த இரு நாட்களாக சஹாரா பாலைவனத்தில் அளவுக்கு அதிகமான கனமழை தொடர்ந்து பெய்தது. இதனால் சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு சஹாரா பாலைவனத்தின் பல நீர்த்தேக்கங்கள் நிரம்பியுள்ளன. அதிலும், அங்குள்ள டாகோனிட் என்ற கிராமத்தில் 24 மணி நேரத்தில் 100 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.
மேலும், ஜகொரா மற்றும் டாடா ஆகிய இடங்களுக்கு இடையே அரை நூற்றாண்டாக வறண்டு கிடந்த இரிகி ஏரி நிரம்பியுள்ளதாக நாசாவின் சேட்டிலைட் புகைப்படங்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, கடந்த மாதம் வந்த வெள்ளத்தால் மொரோக்கோவில் மட்டும் 18 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சஹாரா பாலைவனம் மேற்கு ஆப்பிரிக்காவின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளில் 9 மில்லியன் சதுர கிலோமீட்டருக்கு நீண்டு காணப்படுகிறது.
0
0