ஒரு வருடத்தில் 40 ரயில் விபத்துகள்.. தீர்வு தான் என்ன?
Author: Hariharasudhan12 அக்டோபர் 2024, 11:50 காலை
கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துக்குள்ளான நிலையில், கடந்த ஒரு நிதியாண்டில் மட்டும் 40 ரயில் விபத்துகள் நிகழ்ந்துள்ளன.
சென்னை: மைசூரில் இருந்து தர்பங்கா ரயில் நிலையம் செல்லும் பாக்மதி எக்ஸ்பிரஸ் (Bagmati Express), நேற்று திருவள்ளூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பொன்னேரி ரயில் நிலையத்தை தாண்டி கவரப்பேட்டை அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது, லூப் லைனில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஒரு ரயில் பெட்டி உடனடியாக தீப்பிடிக்கத் தொடங்கியது. மேலும், நான்கு பெட்டிகள் தடம் புரண்டன.
இருப்பினும், இதில் பயணிகளுக்கு பெருத்த சேதன் ஏற்படவில்லை என்றும், ஒரு சிலருக்கு லேசான காயங்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. அது மட்டுமல்லாமல், இது தொடர்பாக விசாரணை நடத்தவும் தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது.
மேலும், சிக்னல் சரியாக போட்டும் லூப் லைனில் பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் சென்றதே விபத்துக்கான காரணம் என்று தெற்கு ரயில்வே தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, விபத்துக்குள்ளான பெட்டிகளை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. அதேநேரம், அங்கு மழை பெய்து கொண்டிருப்பதால், அவ்வப்போது மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டு, மீண்டும் சரிசெய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கடந்த 2023 – 2024 நிதியாண்டில் மட்டும் மொத்தம் 40 ரயில் விபத்துக்கள் நிகழ்ந்துள்ளதாகவும், இதில் 313 பயணிகள் மற்றும் 4 ரயில்வே ஊழியர்கள் உயிரிழந்துள்ளதாகவும் இந்திய ரயில்வே புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அது மட்டுமல்லாமல், கடந்த பத்து வருடங்களில் மட்டும் 719 பயணிகள் மற்றும் 29 ரயில்வே பணியாளர்கள் 638 ரயில் விபத்துகளில் உயிரிழந்துள்ளனர்.
குறிப்பாக, நடப்பாண்டு ஜூன் 17 அன்று மேற்கு வங்கத்தின் ரங்காபனி ரயில் நிலையம் அருகே கஞ்சன்ஜுங்கா எக்ஸ்பிரஸ் விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்தனர் மற்றும் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதைவிட, 2023ஆம் ஆண்டு ஜூன் 2ஆம் தேதி ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ், சரக்கு ரயில் மற்றும் ஹவுரா எக்ஸ்பிரஸ் மோதிக் கொண்ட கோர விபத்தில் 290க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர் மற்றும் ஆயிரத்து 200க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
அதேபோல், கடந்த 2022, ஜனவரி 13-ல் மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரி மாவட்டத்தில் பிகனூர் – கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டதில் 10 பேர் உயிரிழந்தனர் மற்றும் 40க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். மேலும், 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 3-இல் சீமாச்சல் எக்ஸ்பிரஸ், பீகாரின் வைஷாலி மாவட்டத்தில் முறிந்து தடம் புரண்டதில் அதிகளவிலான மக்கள் உயிரிழந்தனர். மேலும், 2018, அக்டோபர் 19 அன்று அமிர்தசரஸில் தசரா பண்டிகையை வேடிக்கப் பார்த்துக் கொண்டே சென்ற நிலையில் ரயில் விபத்துக்குள்ளானதில் 60 பேர் உயிரிழந்தனர். மேலும் 70க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
0
0