5 பைசாவுக்கு ஓரு பிளேட் சிக்கன் பிரியாணி…! செல்லாக் காசுடன் முண்டியடித்தக் கூட்டத்தால் ஆச்சர்யம்..!

4 September 2020, 7:54 pm
5 paise biriyani - - updatenews360
Quick Share

ராமநாதபுரம் : புதிய பிரியாணி கடை திறப்பை முன்னிட்டு ராமநாதபுரத்தில் 5 பைசாவுக்கு ஓரு பிளேட் சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது.

ராமநாதபுரம் பட்டணங்காத்தான் அருகே உள்ள கிழக்கு கடற்கரை சாலையில் இன்று அஞ்சரை பெட்டி என்ற பிரியாணி கடை புதிதாக திறக்கபட்டது. திறப்பு விழாவை முன்னிட்டு வாடிக்கையாளர்களை ஈர்க்க வேண்டும் என்பதற்காக கடையின் உரிமையாளர் புதிய முயற்சியாக, 5 பைசாவுக்கு ஒரு பிளேட் சிக்கன் பிரியாணி இன்று மட்டும் வழங்கப்படும் என அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். நாளை முதல் சிக்கன் பிரியாணி 160 ரூபாய், மட்டன் பிரியாணி 190 ரூபாய்க்கும் விற்கபட உள்ளது.

இந்த நிலையில், இன்று மட்டும் 5 பைசாவுக்கு ஒரு பிளேட் சிக்கன் பிரியாணி என்ற அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து, இன்று காலை முதலே வாடிக்கையாளர்கள் அதிகமானோர் பிரியாணி வாங்க 5 பைசா நாணயத்துடன் கடைக்கு வர தொடங்கினர். ஒவ்வொருரிடமும் ஐந்து பைசாவை வாங்கி கொண்டு ஒரு பிளேட் (சிக்கன்) பிரியாணியோடு தால்சா தயிர் வெங்காயத்துடன் பார்சலாக போட்டு கொடுக்கப்பட்டது.

செல்லாக் காசாக மாறி போன 5 பைசா மக்களிடம் தற்போது இருக்குமா..? என்று நினைத்துக் கொண்டு இருக்கும்போது, 150க்கு மேற்பட்டவர்கள் வந்து 5 பைசாவை கொடுத்து பிரியாணி வாங்க சென்றது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பிரியாணி கடை உரிமையாளர் ஃப்ரத் கூறுகையில், “நான் ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் மதியம், இரவு என இரண்டு வேளைகளில் செயல்படும் பிரியாணி கடையை இன்று புதிதாக திறந்துள்ளேன். புதிய பிரியாணி கடை மீது வாடிக்கையாளர்களின் கவனம் திரும்ப வேண்டும் என்பதற்காகவும், நாணயங்களின் பெருமையை இளம் தலைமுறையினர் உணர வேண்டும் மற்றும் பழைய நாணயங்களை சேகரித்து வைத்திருப்பவர்களுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்பதற்காக இந்தத் திட்டத்தை செயல்படுத்தினோம். இதுவரை 150 க்கும் மேற்பட்டோர் தங்களிடம் இருந்த 5 பைசா நாணயத்தை கொடுத்து பிரியாணி வாங்கி சென்றுள்ளனர், என்றார்.

Views: - 9

0

0