சடலத்தை வாங்க மறுத்து சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்கள்: தடியடி நடத்தி கலைத்த போலீசார்

16 November 2020, 10:25 pm
Quick Share

வேலூர்: வேலூர் அருகே மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட வாலிபரின் இறப்பில் மர்மம் இருப்பதாக கூறி வாலிபர் சடலத்தை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டபோது போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

வேலூர் அடுத்த ஆர் காட்டன் குடிசை கிராமத்தை சேர்ந்தவர் ரஞ்சித். இவர் நேற்று வீட்டின் அருகே உள்ள மரத்தில் தூக்கில் தொங்கியபடி சடலமாக கிடந்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் சடலத்தை பார்த்து கதறி அழுதனர். இதுகுறித்து தகவலறிந்த வேலூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் ரஞ்சித்துக்கும் அதே கிராமத்தை சேர்ந்த உறவினருக்கும் இடையே கடந்த 2 நாட்களுக்கு முன்பு சொத்து தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், திடீரென ரஞ்சித் தூக்கில் சடலமாக இருந்ததால் அவரது சாவில் சந்தேகம் உள்ளது எனக் கூறி அவரது உறவினர்கள் தாலுகா காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இந்நிலையில் இன்று ரஞ்சித்தின் உறவினர்கள் அவர் சாவில் சந்தேகம் உள்ளதால் அவரது சடலத்தை வாங்க மாட்டோம் எனக்கூறி வேலூர் அரசு மருத்துவமனை எதிரே வேலூர் திருவண்ணாமலை சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ரஞ்சித் மரணம் குறித்து உரிய விசாரணை நடத்துவதாக போலீசார் தெரிவித்தனர். ஆனால் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் போலீசார் தடியடி நடத்தி அவர்களை அங்கிருந்து கலைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது.

Views: - 19

0

0