3 ஆண்டாக ஒரே இடத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் இடமாற்றம்: தமிழக தேர்தல் அதிகாரி உத்தரவு..!!

Author: Aarthi Sivakumar
17 August 2021, 3:57 pm
Quick Share

சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களில் 3 ஆண்டாக ஒரே இடத்தில் பணியாற்றும் ஊழியர்களை இடமாற்றம் செய்ய பட்டியல் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.

தமிழகத்தில் கடந்த 2019ம் ஆண்டு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது. வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்கள் புதிதாக பிரிக்கப்பட்டு அவற்றில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் எல்லைகள் முழுமையாக வகுக்கப்படாமல் இருந்தன.

இதையடுத்து இந்த 9 மாவட்டங்களிலும் ஏற்கனவே ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. விடுபட்ட 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு செப்டம்பர் 15ம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க தமிழக தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து இந்த 9 மாவட்டங்களில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. ஆகவே, இந்த 9 மாவட்டங்களிலும் 3 ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணிபுரியும் ஊழியர்களை வருகிற 31ம் தேதிக்குள் இடமாற்றம் செய்ய தமிழக தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார். அதன்படி, ஊரக வளர்ச்சித் துறையில் 3 ஆண்டுகள் பணிபுரிந்த இளநிலை உதவியாளர்கள், உதவியாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர்களை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அந்த பணிகளை விரைந்து செய்யாமல் காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 2 மாவட்ட நிர்வாகத்தினர் மெத்தனமாக உள்ளதாக சங்கத்தினர் குற்றம்சாட்டுகின்றனர். இதுகுறித்து ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், தேர்தல் நடக்கும் 9 மாவட்டங்களிலும் 3 ஆண்டுகள் பணிபுரிந்த ஊழியர்களின் பட்டியல்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. விரைவில் அவர்கள் இடமாற்றம் செய்யப்படுவார்கள் என்றார்.

Views: - 251

0

0