சாலையை கடக்க முயன்ற பைக் மீது கார் மோதி பயங்கரம்.. தூக்கி வீசப்பட்ட அண்ணன், தங்கை ; பதறவைக்கும் சிசிடிவி காட்சி!!

Author: Babu Lakshmanan
20 December 2022, 2:20 pm
Quick Share

ஈரோடு மாவட்டம் பவானி அருகே தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதியதில் அண்ணன், தங்கை தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலே உயிரிழந்த சம்பவம் தொடர்பான பதைபதைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்துள்ள சாமி கவுண்டன்பாளையம் பகுதி சேர்ந்தவர் முத்து. சமையல் தொழிலாளியான இவர், கோவில் பூசாரியாக இருந்து வருகிறார். இந்த நிலையில், நசியனூரில் உள்ள மாரியம்மன் கோவிலில் பூஜை செய்வதற்காக, தனது தங்கை புஷ்பா உடன் முத்து இருசக்கர வனத்தில் கோவிலுக்கு சென்று விட்டு, கோவை – சேலம் தேசிய நெடுஞ்சாலை வழியாக வீடு திரும்பி கொண்டு இருந்தார்.

அப்போது, சாமி கவுண்டன் பாளையம் தேசிய நெடுஞ்சாலை பிரிவில் சாலையை கடக்க முயன்ற போது, அதிவேகமாக வந்த கார் இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் முத்து மற்றும் புஷ்பா ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலே படுகாயம் அடைந்து இருவரும் உயிரிழந்தனர்.

இச்சம்பவம் குறித்து அப்பகுதியினர் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சித்தோடு போலீசார், உயிரிழந்த இருவரின் உடலை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து காரை அதிவேகமாக ஓட்டி வந்த ஆத்தூர் பகுதியை சேர்ந்த சற்குணம் என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இந்த விபத்து குறித்து பத பதைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. மேலும், தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலையில் ஏற்படும் விபத்துகளை தவிர்க்க முக்கிய இடங்களில் வாகனங்களை வேகத்தை கட்டுப்படுத்த தடுப்புகள் அமைக்க தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள கிராம மக்கள் கோரிக்கை எடுத்துள்ளனர்.

Views: - 587

0

0