வங்கி ஏடியம் இயந்திரத்தை கொள்ளையடித்த கும்பல் : விரைந்து பிடித்த தனிப்படை போலீஸ்

3 March 2021, 8:35 pm
Quick Share

கோவை: திருப்பூர் மாவட்டத்தில் வங்கி ஏடிஎம் இயந்திரத்தை பணத்துடன் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில், துரிதமாக செயல்பட்டு கொள்ளையர்களை கைது செய்த தனிப்படை போலீசாரை மேற்கு மண்டல காவல்துறைத் தலைவர் தினகரன் பாராட்டியுள்ளார்.

திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சர்க்கார் பெரியபாளையம் கிளை பேங்க் ஆப் பரோடா முன்பு வைக்கப்பட்டிருந்த ஏடிஎம் இயந்திரத்தை ரூ 1,00,100 பணத்துடன் கடந்த 28ம் தேதி மர்ம நபர்கள் இயந்திரத்துடன் காரில் கொள்ளையடித்துச் சென்று விட்டனர். இச்சம்பவம் தொடர்பாக ஊத்துக்குளி காவல் நிலையத்தில் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷா மித்தல் உத்தரவுபடி 7 சிறப்பு தனிபடைகள் அமைக்கப்பட்டன.

தனிப்படை போலீசார் குற்றவாளிகளை தேடி வந்த நிலையில், நேற்று மாலை 6 மணியளவில் ஈரோடு கருங்கல்பாளையம் தனியாருக்கு சொந்தமான குடோன் அருகே பதுங்கியிருந்த ஹரியானா மாநிலத்தை சேர்ந்த ராகுல்(24), ரபிக்(24) ஷாகித்(25), ஷாஜித்(21), இர்சாத்(38), காசிம் கான்(45), ஆகியோர்களை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் விசாரணை செய்ததில் அவர்களிடமிருந்து இந்த வழக்கில் கொள்ளையடிக்க பயன்படுத்திய கண்டெய்னர் ஈச்சர், கொள்ளையடித்த பணம் ரூ.69,120 மற்றும் கொள்ளையடிக்க பயன்படுத்திய 2 நாட்டு கை துப்பாக்கிகள் மற்றும் 9 தோட்டாக்கள், 5 மங்கி குல்லா, 5 செட் கையுறைகள், வெல்டிங் மிஷின், கேஸ் சிலிண்டர், ஆக்ஸிஜன் சிலிண்டர், கேஸ் கட்டர், ராடு,

ஸ்குரு டைவர், கட்டிங் பிளேடு, ஸ்பேனர், நைலான் பெல்ட், பெயிண்டிங் ஸ்பிரே உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டன. தொடர்ந்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் திறமையாக செயல்பட்டு எதிரியை பிடித்த தனிப்படையினருக்கு மேற்கு மண்டல காவல்துறை தலைவர் தினகரன் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

Views: - 1

0

0