திருத்தணி முருகன் கோவிலுக்கு விரைவில் ரோப்கார் வசதி: அமைச்சர் சேகர்பாபு தகவல்

2 July 2021, 7:26 pm
Quick Share

திருவள்ளுர்: பகதர்களின் வசதிக்காக திருத்தணி முருகன் கோவிலுக்கு விரைவில் ரோப்கார் வசதி செய்யப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

திருவள்ளுர் மாவட்டம், திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, திருக்கோவிலில் நிலுவையில் உள்ள சாலை, கோபுரப்பணிகள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகள் குறித்து இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:- முதலமைச்சர் முக.ஸ்டாலின் ஆணையின்படி, 79.9 ஏக்கரிலான திருக்கோவிலின் நிலங்கள் இந்து சமய அறநிலையத்துறை மீட்டெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலங்களின் மதிப்பு ரூ.500 கோடிக்கும் மேலாகும். முருகனின் திருத்தலமான அறுபடை வீடுகளில் 5-ஆம் படை வீடான இந்த முருகன் கோவிலில் பக்தர்களின் தேவையான பல்வேறு அடிப்படை வசதிகள் கடந்த காலங்களில் விரைவு படுத்தப்படாமல் இருப்பதாக அறியப்பட்டுள்ளது.

முதலமைச்சரின் தேர்தல் வாக்குறுதிகளில் இந்த திருக்கோவிலுக்கு படிகள் அதிகம் இருப்பதால் மூத்தோர்கள், முதியோர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு கடினமான சூழ்நிலை இருப்பதை அறிந்து ரோப்கார் வசதியை ஏற்படுத்தி தருவதாக தேர்தல் வாக்குறுதியில் கூறியிருந்தார். அந்த ரோப்கார் அமைப்பதற்கான ஆய்வு மேற்கொண்டு, அதற்குண்டான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்துவதற்குண்டான இடங்கள் ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வின் முடிவை முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று, ஏற்கனவே நிலுவையில் உள்ள அனைத்து பணிகளையும் ஓர் ஆண்டு காலத்திற்குள் இந்த பணிகளை நிறைவு செய்வதற்குண்டான போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

கூடிய விரைவில் அனைத்து வசதிகளுடன் கூடிய இந்த திருத்தலமான அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடான முருகப்பெருமானை தரிசிக்க வரும் அனைத்து பக்தர்களுக்கும் தேவையான அடிப்படை வசதிகள் நிறைவேற்றி தரப்படும் என்று அமைச்சர் சேகர் பாபு கூறினார்.

Views: - 69

0

0