செம்மரக் கடத்தலில் போலீசுக்கு டிமிக்கி கொடுத்த குற்றவாளி கைது : செல்போன் சிக்னலால் சிக்கினான்!!

6 November 2020, 7:49 pm
Cbe Arrest - Updatenews360
Quick Share

கோவை : செம்மரக் கடத்தலில் தொடர்புடைய குற்றவாளியை கோவையில் வைத்து ஆந்திர போலீசார் அதிரடி கைது செய்தனர்.

ஆந்திர செம்மர கடத்தல் வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி கோவையில் பதுங்கி இருந்தபோது கைது செய்யப்பட்டார். ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்ட வனப்பகுதியில் விலையுயர்ந்த செம்மரங்கள் அதிக அளவில் உள்ளன.

சர்வதேச சந்தையில் செம்மர கட்டைகளுக்கு அதிக மவுசு இருப்பதால் சமூக விரோதிகள் செம்மரத்தை சட்டவிரோதமாக வெட்டி கடத்தி கோடி கணக்கில் பணம் சம்பாதித்து வருகின்றனர்.

ஆந்திர மாநில அரசும், செம்மரக் கடத்தலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், செம்மரம் கடத்துவது தொடர்ந்து வருகின்றன. செம்மர கடத்தலில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்தான் அதிகளவில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.

செம்மரக்கட்டை கடத்தல் தொடர்பாக தமிழகத்தில் ஏற்கனவே பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிலரை தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு தேடி வந்தனர்.

இந்நிலையில், கடந்த ஓராண்டுக்கும் மேலாக தலைமறைவாக இருந்த கோவை குனியமுத்தூர் காவேரி நகரை சேர்ந்த ஹக்கீம் (எ) பாஷா(வயது 41) ஆந்திர மாநிலம் கடப்பா போலீசாரால் நேற்று கோவையில் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

செல்போன் எண் சிக்னலை வைத்து கோவை நகர போலீசார் உதவியுடன் அவரை கைது செய்து ஆந்திராவுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். கைது செய்யப்பட்ட பாஷா துணி கடை வைத்து நடத்தி வருகிறார்.

சர்வதேச கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்பதாக தெரிகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்றோ அல்லது நாளையோ வெளியிடப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்

Views: - 18

0

0