அரிசி ஆலை அதிபரின் மகனை கடத்தி ரூ.3 கோடி அபேஸ்: புகாரளித்த 6 மணி நேரத்தில் கடத்தல் கும்பலை கைது செய்த காவல்துறை..!!

Author: Aarthi Sivakumar
24 August 2021, 3:39 pm
Quick Share

திருப்பூர்: காங்கேயம் அருகே போலீஸ் எனக்கூறி அரிசி ஆலை அதிபரின் மகனைக் கடத்தி ரூ.3 கோடியை பறித்த மர்மநபர்கள் 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி, காடையூரில் அரிசி ஆலை, திருமண மண்டபங்களை வாடகைக்கு விடுதல் உள்ளிட்ட தொழில்களை செய்து வருகிறார். இவரது மகன் சிவபிரதீப்.

கடந்த 22ம் தேதி அரிசி ஆலைக்கு வந்த சிவபிரதீப் மதிய உணவுக்காக காரில் வீட்டுக்கு புறப்பட்டுச் சென்றார். காங்கயம் வீரசோழபுரம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, காரில் வந்த 7 பேர் திடீரென சிவ பிரதீப் காரை மறித்து அவரை மிரட்டி காருடன் அவரை கடத்தினர்.

சிவபிரதீப்பை திண்டுக்கல் மாவட்டம் சிறுமலைக்கு கடத்திச் சென்ற மர்ம நபர்கள் ஈஸ்வரமூர்த்தியை செல்போனில் தொடர்பு கொண்டு, ‘உங்களது மகனை கடத்தி வைத்துள்ளோம். ரூ.3 கோடி தொகையை கொடுத்தால் அவரை விட்டுவிடுகிறோம். இல்லையெனில் அவரை கொன்று விடுவோம். ரூ.3 கோடி தொகையை திண்டுக்கல் மாவட்டம் பழநி சாலைக்கு கொண்டு வந்து கொடுங்கள். போலீஸாரிடம் செல்லக் கூடாது என எச்சரித்துள்ளனர்.

இதனால், அதிர்ச்சியடைந்த ஈஸ்வரமூர்த்தி மகனை விட பணம் பெரிதல்ல என எண்ணி, ரூ.3 கோடி பணத்துடன் திண்டுக்கல்லுக்கு நேற்று முன்தினம் புறப்பட்டுச் சென்றார். பழநி சாலையில் உள்ள ஒரு இடத்தில் ஈஸ்வரமூர்த்தி காத்திருந்தார். அங்கு வந்த மர்மநபர்கள், அவரிடம் பணத்தை வாங்கிவிட்டு, சிவபிரதீப்பை விட்டுவிட்டு மற்றொரு காரில் தப்பினர்.

பின்னர், இதுகுறித்து, காங்கேயம் காவல்நிலையில் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து, மேற்கு மண்டல ஐஜி சுதாகர், கோவை சரக டிஐஜி முத்துசாமி ஆகியோரது மேற்பார்வையில், எஸ்பி சசாங் சாய் உத்தரவின் பேரில், காங்கயம் டிஎஸ்பி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. கடத்தலில் ஈடுபட்டவர்கள் மதுரையில் உள்ள ஒரு இடத்தில் பதுங்கியிருப்பது தெரியவந்தது.

அங்கு சென்ற போலீஸார் 3 பேரை பிடித்தனர். பிடிபட்டவர்கள் சக்திவேல்(37), அகஸ்டின்(45), பாலாஜி (38) எனத் தெரிந்தது. இவர்களிடம் இருந்து ரூ.1 கோடியே 69 லட்சத்து 50 ஆயிரத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர். மற்றொரு நபரான பஷீர் (32) கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிடிபட்டார். அவரிடம் இருந்து ரூ. 20 லட்சத்து 44 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. இவ்வழக்கில் தொடர்புடைய மேலும் மூவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

Views: - 529

0

0