‘பாதுகாப்பாக பயணம் மேற்கொள்ளுங்கள்’ ரயில் பயணிகள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்..!!

19 April 2021, 1:37 pm
Quick Share

சென்னை: கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் ரயிலில் பயணம் மேற்கொள்பவர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு ரயில்வே அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. எனவே, கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மக்களின் தேவையைக் கருத்தில் கொண்டு பேருந்துகள், ரயில்கள், மெட்ரோ ரயில்கள் வழக்கம்போல் இயக்கப்படுகின்றன.

இருப்பினும், கொரோனா தொற்றில் இருந்து மக்கள், தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமாகும். இதுகுறித்து, அதிகாரிகள் பயணிகளுக்கு சில வழிகாட்டு நெறிமுறைகளை அறிவுறுத்தியுள்ளனர்.

வெளியூர் பயணத்தின்போது அரசு அறிவித்துள்ள அறிவுரைகளை மக்கள் அலட்சியப்படுத்தக் கூடாது. முகக் கவசம் அணிவது, கைகளை சானிடைசர் மூலம் கழுவுவது, சமுக இடைவெளியைக் கடைபிடிப்பது உள்ளிட்டவற்றை கட்டாயம் பின்பற்றவேண்டும். மேலும், தங்களுக்கான குடிநீர், உணவுகளை வீட்டில் இருந்தே தயாரித்து கொண்டு வருவது நல்லது.

அவசர பயணத்தைத் தவிர மற்ற வெளியூர் பயணங்களை கூடுமானவரை தவிர்க்கலாம். குறிப்பாக, முதியோர், நோயாளிகள் வெளியூர் பயணம் செய்வதை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். அதேபோல், எந்த பயணம் மேற்கொண்டாலும் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்வது நல்லது. கூட்ட நெரிசலுடன் பயணிக்க வேண்டாம். மேலும், வெளியூர் பயணம் முடித்து வீடுகளுக்கு திரும்பும்போது, சிறியஅளவில் ஏதாவது அறிகுறி தென்பட்டாலும் உடனடியாக கரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் போன்ற வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளனர்.

Views: - 42

0

0