சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமைப்பதியில் தை திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்.!

15 January 2021, 8:56 am
kumari temple - updatenews360
Quick Share

கன்னியாகுமரி: சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமைப்பதியில் தை திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

சாமிதோப்பில்  பிரசித்தி பெற்ற அய்யா வைகுண்ட சாமியின் தலைமைப்பதியில் தை திருவிழா இன்று  காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு நடைதிறப்பும், அய்யாவுக்கு பணிவிடையும்,  கொடிப்பட்டம் தயாரித்தலும் தொடர்ந்து கொடிப்பட்டம் பதியை சுற்றி வலம்  வரும் நிகழ்ச்சியும் தொடர்ந்து காலை 6.30 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. 


பால பிரஜாபதி அடிகளார்  திருக்கொடியினை ஏற்றி வைத்தார். தொடர்ந்து பக்தர்களுக்கு இனிமம் வழங்கப்பட்டது. பகல் 12மணிக்கு பக்தர்களுக்கு அன்னதர்மம் வழங்கப்பட்டது.  இரவு அய்யா தொட்டில் வாகனத்தில் தெருவீதி வலம் வருதல் நடைபெறுகிறது. திருவிழா தொடர்ந்து 11 நாட்கள் நடக்கிறது.

இரண்டாம் நாளான நாளை காலை, மாலை இரு வேளை  அய்யாவுக்கு பணிவிடையும் இரவு அய்யா வைகுண்ட சாமி பரங்கி நாற்காலி  வாகனத்தில் வலம் வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. மூன்றாம் நாள் அய்யா வெள்ளை சாத்தி அன்ன வாகன பவனியும், நான்காம் நாள் பூஞ்சப்பர வாகன பவனியும், ஐந்தாம் நாள் பச்சை சாத்தி சப்பர வாகன பவனியும், ஆறாம் நாள் கற்பக வாகன பவனியும், ஏழாம் நாள் சிவப்பு சாத்தி கருட வாகன பவனியும் நடைபெறுகிறது.

வருகிற 22-ம் தேதி வெள்ளிக்கிழமை எட்டாம் திருவிழா நடைபெறுகிறது. அன்று மாலை நான்கு மணிக்கு அய்யா வைகுண்ட சாமி  அலங்கரிக்கப்பட்ட வெள்ளை குதிரை வாகனத்தில் எழுந்தருளி வலம் வந்து முத்திரி கிணற்றங்கரையில் கலி வேட்டையாடும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. வருகிற 25-ம் தேதி திங்கட்கிழமை  11-ம் திருவிழா நடைபெறுகிறது. அன்று பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது.

விழா நாட்களில் தினமும் காலை, மாலை பணிவிடையும்,  நண்பகல் உச்சிப்படிப்பும், இரவு வாகன பவனியும், தொடர்ந்து  உகப்படிப்பும் அன்னதானமும் நடைபெறுகிறது.

Views: - 10

0

0