பள்ளிகளுக்கு விடுமுறை : கால தாமதமான அறிவிப்பால் மாணவர்கள் அவதி…! முன்கூட்டியே அறிவிப்பு வெளியிட கோரிக்கை

Author: Babu Lakshmanan
10 November 2021, 10:07 am
Quick Share

கோவை: கோவையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடுவதாக மாவட்ட ஆட்சியர் காலதாமதமாக அறிவித்ததால் பள்ளிக்குச் சென்ற மாணவ, மாணவிகள் அவதியுற்றனர்.

கோவையில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு மழையின் காரணமாக இன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் சமீரன் அறிவித்தார். இந்த அறிவிப்பு இன்று காலை 8.20 மணி அளவில் தான் வெளியிடப்பட்டது. ஆனால் அதற்கு முன்னதாகவே மாணவர்கள் பள்ளிக்கு சென்றுவிட்டனர்.

ஆட்டோக்களில் பள்ளிக்கு செல்லும் மாணவர்களை பள்ளியில் இறக்கிவிட்டு ஆட்டோக்கள், வாகனங்கள் திரும்பின. இந்த நிலையில் திடீரென விடுமுறை அறிவிப்பு வெளியானதால் மாணவ மாணவிகள் பள்ளி வாசலிலேயே காத்திருந்தனர். பிறகு அவர்களுக்கு பள்ளி நிர்வாகம் சார்பாக விடுமுறை என தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து மாணவ மாணவிகள் மீண்டும் வீடுகளுக்கு திரும்புவதற்கு கடும் அவதியுற்றனர்.

இதனிடையே மாணவர்கள் வந்து விட்டதால் ஒரு சில பள்ளிகள் மட்டும் இன்று இயங்கி வருகின்றன. பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியிடுவது என்றால் முந்தைய நாள் இரவே வெளியிட வேண்டும் என்றும் பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Views: - 279

0

0