ஸ்கூல் டி.சி.யை வைத்து மாணவர்கள் இ-பாஸ் பெற்றுக்கொள்ளலாம் : அமைச்சர் செங்கோட்டையன் தகவல்..!

13 August 2020, 2:13 pm
Sengottaiyan - Updatenews360
Quick Share

சென்னை : பள்ளி மாற்றுச் சான்றிதழை காட்டி, இ-பாஸை மாணவர்கள் பெற்றுக் கொள்ளலாம் என அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில்‌ கொரோனா பேரிடர்‌ காலத்தில்‌ 7வது கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், ஒரு சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இருப்பினும், பள்ளி, கல்லூரி உள்ளிட்டவற்றின் திறப்பு குறித்து இப்போதைக்கு முடிவு செய்ய முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, காலாண்டு, அரையாண்டு மற்றும் வருகைப்பதிவின் அடிப்படையில் 10 வகுப்பு மற்றும் 12 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

அதேவேளையில், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் வாங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முக்கிய காரணங்களுக்காக விண்ணப்பிப்பவர்களுக்கு மட்டுமே இ-பாஸ் விநியோகிக்கப்பட்டு வருகிறது. தற்போது, பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியிருப்பதால், மாணவர்கள் கல்லூரிகளில் சேருவதற்கான பணிகள் தொடங்கி விட்டன. எனவே, மாணவர்களுக்கு இ-பாஸ் கிடைப்பதில் தாமதம் ஏற்படாமல் இருக்க அரசு ஆலோசித்து வருகிறது.

இந்த நிலையில், ஈரோடு மாவட்டம் கோபிச் செட்டிபாளையத்தில் செய்தியாளர்களிடம் அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது :- கடந்த ஆண்டை ஒப்பிடும் போது இந்த ஆண்டு மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். 10ம் வகுப்பு மாணவர்களுக்கு குறைவான மதிப்பெண் வழங்கியதாக எழுந்த குற்றச்சாட்டு ஏற்புடையதல்ல.

மாணவர்களுக்கு இ-பாஸ் தேவையா என்பது குறித்து முதலமைச்சருடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும். அதுவரையில், பள்ளி மாற்றுச் சான்றிதழை காண்பித்து மாணவர்கள் இ-பாஸ் பெற்றுக் கொள்ளலாம். அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கையை 17-ம் தேதி தொடங்கலாம், எனக் கூறியுள்ளார்.

Views: - 8

0

0