பள்ளி மாணவியை பல மாநிலங்களுக்கு கடத்தி 2 வருடமாக உல்லாசம் : ஜிம் மாஸ்டர் கைது.. ஆண் குழந்தையுடன் மாணவி மீட்பு!!
Author: Udayachandran RadhaKrishnan17 January 2022, 5:32 pm
தர்மபுரி : முகநூல் மூலம் பழகி தர்மபுரி மாணவியை 5 மாநிலங்களுக்கு கடத்தி சென்று பலாத்காரம் செய்த ஜிம் மாஸ்டரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் பொம்மிகுப்பம் பகுதியை சேர்ந்தவர் நரசிம்மன் (வயது 26). ஜிம் மாஸ்டரான இவருக்கு திருமணமாகி 2 மனைவிகள் உள்ளனர். அவர்கள் குடும்ப தகராறு காரணமாக நரசிம்மனை பிரிந்து சென்று விட்டனர்.
இரண்டு மனைவிகளை பிரிந்து சென்றதால் வருத்தத்தில் இருந்த ஜிம் மாஸ்டர், முகநூலில் சேட்டிங்கில் ஈடுபட்டு வந்தார். இந்தநிலையில் தர்மபுரி மதிகோன்பாளையத்தை சேர்ந்த 15 வயதுடைய 10-ம் வகுப்பு மாணவியுடன் நரசிம்மனுக்கு முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டது.
மனவருத்தத்தில் இருந்த நரசிம்மனுக்கு மருந்தாக மாணவியை பயன்படுத்த எண்ணிய நரசிம்மன் காதல் வலையை வீசினார். கடந்த 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 5-ந் தேதி பெங்களூருவில் இருந்து நரசிம்மன் இரு சக்கர வாகனத்தில் தர்மபுரிக்கு வந்தார்.
அப்போது திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி மாணவியை கடத்தி சென்றார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் தர்மபுரி டவுன் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
மேலும் சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தனர். இதையடுத்து கோர்ட்டு உத்தரவுபடி தருமபுரி நகர காவல் உதவி ஆய்வாளர் சுந்தரமூர்த்தி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
அவர்கள் மாணவியின் சமூகவலைத்தள கணக்குகளை ஆய்வு செய்தனர். மேலும் நரசிம்மனின் செல்போன் எண்ணை கொண்டு அவரை தேடி வந்தனர்.
இந்தநிலையில் தெலுங்கானா மாநிலம் சங்காரெட்டி மாவட்டம் இஷ்ணாபூரில் ஜிம் மாஸ்டர் நரசிம்மனை காவல்துறையினர் பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் பள்ளி மாணவியை கடத்தி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்பட 5 மாநிலங்களுக்கு மோட்டார் சைக்கிளிலேயே அவர் கடத்திச்சென்றது தெரிய வந்தது.
மேலும், ஆசைவார்த்தை கூறி மாணவியை பலமுறை பலாத்காரம் செய்ததும், தற்போது மாணவிக்கு 8 மாத ஆண் குழந்தை இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் நரசிம்மனை காவல்துறையினர் கைது செய்தனர்.
தெலுங்கானாவில் இருந்த மாணவி மற்றும் அவரது 8 மாத குழந்தையை மீட்டு மருத்துவ பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.
0
0