விழுப்புரம் சம்பவம்..! ஏற்றுக்கொள்ளவே முடியாத கொடூர செயல்..!

11 May 2020, 6:46 pm
Quick Share

சென்னை: பெரியவர்களுக்குள் இருக்கும் குடும்பப்பகைக்குக் குழந்தையை எரித்துக் கொல்வதெல்லாம் ஏற்றுக்கொள்ளவே முடியாத கொடூரமான செயல் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டித்து உள்ளார்.

இரண்டு குடும்பங்கள் இடையே எழுந்த பகையானது, விழுப்புரத்தை அடுத்த சிறுமதுரை என்ற கிராமத்தைச் சேர்ந்த ஜெயபால் என்பவரின் மகள் ஜெயஸ்ரீயின் உயிரை பறித்துள்ளது. அவரின் கொடூரமான மரணம் தமிழகத்தையே உலுக்கி உள்ளது.

இந்த சம்பவத்துக்கு காரணமான முருகன், கலியபெருமாள் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும் இந்த கொடூர சம்பவத்துக்கு தொடர்ந்து கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

இந்நிலையில் இந்த சம்பவத்தை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் டுவிட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

விழுப்புரம் மாவட்டம் சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி தங்கை ஜெயஸ்ரீ, குடும்ப முன்பகை காரணமாக பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்லப்பட்ட செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். மகளை இழந்துவாடும் குடும்பத்தினருக்கு எனது ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கேற்கிறேன் என்று கூறி உள்ளார்.

மற்றொரு பதிவில் அவர் கூறியிருப்பதாவது: பெரியவர்களுக்குள் இருக்கும் குடும்பப்பகைக்கு குழந்தையை எரித்துக் கொல்வதெல்லாம் ஏற்றுக் கொள்ளவே முடியாத கொடூரமான செயல். இதற்கு காரணமானவர்களுக்கு எவ்வித பாகுபாடும் இன்றி விரைந்து தண்டனை வழங்கப்பட வேண்டும்.

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் கடுமையான சட்டங்களால் மட்டுமே நிறுத்தப்படும் என்பதை உணர்ந்து அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்!  என்று தெரிவித்துள்ளார்.