நாளை முதல் பேருந்துகள் இயக்கம்…வணிக வளாகங்கள் திறப்பு: கோவையில் ஆயத்த பணிகள் தீவிரம்..!!

4 July 2021, 3:39 pm
Quick Share

கோவை: கோவையில் நாளை பொதுப் போக்குவரத்து துவங்கப்பட உள்ளது அதே போல், வணிக வளாகங்களும் திறக்கப்பட உள்ள நிலையில் அதற்கான ஆயத்தப்பணிகள் துரித கதியில் நடைபெற்று வருகின்றன.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலையின் கோர தாண்டவம் முடிவுக்கு வந்துள்ளது. தொற்று பாதிப்பின் இரண்டாம் அலையில் அதிகமாக பாதிக்கப்பட்ட மாவட்டமாக கோவை உள்ளது. இதனால் பல மாவட்டங்களுக்கு தளர்வுகள் வழங்கப்பட்ட போதிலும், கோவை உட்பட 11 மாவட்டங்களுக்கு தளர்வுகள் வழங்கப்படாமல் இருந்தது.

தற்போது தொற்றின் தாக்கம் குறைந்த நிலையில், அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே மாதிரியான தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் பொதுப்போக்குவரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாக அமைந்துள்ளது. அந்த வகையில், நாளை கோவையில் பேருந்து சேவைகள் துவங்க உள்ளன. கடந்த முறை ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு பொது போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டபோது குறைவான அளவிலேயே பயணியகள் வந்ததால் இந்த தளர்வில் குறைவான அளவிலேயே பேருந்துகள் சோதனை அடிப்படையில் இயக்கப்பட உள்ளன.

இதனை தொடர்ந்து நீண்ட நாட்களாக இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துகள் சுத்தப்படுத்தப்பட்டு வருகின்றன. இதே போல் கோவில்களும் நாளை திறக்கப்பட உள்ளது. மேலும், நீண்ட நாட்களாக மூடப்பட்டிருந்த வணிக வளாகங்கள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில், கோவையில் உள்ள ப்ரூக் பீல்ட்ஸ், பன் மால், ப்ரோசான் மால் ஆகிய வணிக வளாகங்களில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வளாகங்களில் நீண்ட நாட்களாக இருப்பு வைக்கப்பட்டதால் துணி உள்ளிட்ட பொருட்கள் சேதமடைந்துள்ளதாக வேதனை தெரிவிக்கும் கடை உரிமையாளர்கள், தற்போதாவது செயல்பட அனுமதி கிடைத்ததை நினைத்து நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர்.

Views: - 161

0

0