விதிகளை பின்பற்றாத கடைகள், நிறுவனங்களுக்கு சீல் : கோவை மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை!!

Author: Udayachandran
10 October 2020, 3:26 pm
Corporation Commissioner - Updatenews360
Quick Share

கோவை : கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் செயல்படும் கடைகள் மற்றும் நிறுவனங்கள் முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்டவற்றை பின்பற்றாமல் இருந்தால் சீல் வைக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

கோவை மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலக கூட்டரங்கில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மண்டல அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாநகராட்சி ஆணையர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் இன்று நடைபெற்றது.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் கூறியதாவது : கோவை மாநகராட்சியில் கொரோனா தொற்று பரவுதலை தடுக்கும் விதமாக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், தொற்று பரவுதலை தடுப்பதற்காக மாநகராட்சியில் உள்ள அனைத்து மண்டலங்களிலும் தொடர்ந்து மருத்துவ முகாம்கள் மற்றும் வீடு வீடாகச் சென்று சளி, இருமல், காய்ச்சல் உள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு வார்டில் மருத்துவ முகாம் நடைபெறும் போது ஒரு வாரம் கழித்து மீண்டும் அதே இடத்தில் மருத்துவ முகாம் நடைபெற வேண்டும்.

அப்பகுதியில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் விபரங்கள் சேகரிக்கப் பட வேண்டும். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான இரயில் நிலையம், பேருந்து நிலையம், மார்க்கெட், வெளியூர் செல்லும் பேருந்து நிலையங்கள் ஆகிய இடங்களில் மருத்துவ முகாம்கள் நடைபெற வேண்டும்.

பேருந்துகளில் ஓட்டுநர், நடத்துநர், பயணிகள் அனைவரும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். இவற்றை பின்பற்றாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். உணவகங்கள், வணிக வளாகங்கள், பேக்கரிகள், மளிகைக்கடைகள் ஆகியவற்றில் பணிபுரிபவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியினை பின்பற்ற வேண்டும். வாடிக்கையாளர்களிடம் இவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என தெரிவிக்க வேண்டும். இவற்றை கடைபிடிக்காத கடைகளுக்கு சீல் வைக்கப்படும்.

மத்திய சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்திட வேண்டும். புதிதாக சிறைக்கு உள்ளே வரும் கைதிகளை 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் எடுத்துரைக்க வேண்டும். மேலும், மருத்துவமனைகளில் வென்டிலேட்டர் வசதி இருப்பதை உறுதிப்படுத்திட வேண்டும். கொரோனா தொற்று இல்லாத மாநகராட்சியாக நிகழ்ந்திட அனைவரும் முகக்கவசம் அணிந்து, இடைவெளியினை கடைபிடித்து கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்திட பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இக்கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையர் மதுராந்தகி, மாநகரப்பொறியாளர், லட்சுமணன், உதவி நிர்வாக பொறியாளர்கள், அனைத்து மண்டல சுகாதார ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.

Views: - 82

0

0