எஸ்.பி.பியின் உடல்நிலை மீண்டும் கவலைக்கிடம் : மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை!!

24 September 2020, 6:51 pm
SPB - updatenews360
Quick Share

எஸ்.பி.பி உடல்நிலை மீண்டும் கவலைக்கிடமாக உள்ளதாக எம்ஜிஎம் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த எஸ்.பி.பி மீண்டுவர வேண்டும் என உலகமெங்கும் உள்ள அவரது ரசிகர்களும், பிரபலங்களும் பல்வேறு கட்ட பிரார்த்தனைகளை முன்னெடுத்தனர். இதனை தொடர்ந்து நாள்தோறும் அவரின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டு வந்தது.

இந்த சூழலில் ஆபத்தான கட்டத்தில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த எஸ்.பி.பி-யின் உலல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு கொரோனா தொற்று முழுவதும் குணமடைந்து நெகட்டிவ் என வந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை அனுப்பியது.

அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும், தொடர்ந்து உயிர் காக்கும் கருவி மூலமாக எஸ்பிபி சிகிச்சை பெற்று வருவதாக வீடியோவில் பதிவிட்டுள்ளார். மேலும் இயல்பாக உணவுகளை உட்கொள்ள எஸ்.பி.பி முயற்சித்து வருவதாக கடந்த 19ஆம் தேதி அவரது மகன் எஸ்.பி.பி சரண் வீடியோ வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில் எஸ்.பி.பி உடல்நிலை மீண்டும் கவலைக்கிடமாக உள்ளதாக எம்.ஜி.எம் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் எஸ்பிபியின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால், அதிகபட்ச உயிர்காக்கும் கருவிகளுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது. இந்த செய்தி அவரது ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.