தென்‌ மாவட்ட குடிநீர்‌ பற்றாக்குறை விஷயத்தில் கவனம் செலுத்துங்க : தமிழக அரசுக்கு வைகோ வலியுறுத்தல்

13 June 2021, 6:19 pm
Vaiko Condemned -Updatenews360
Quick Share

தென்‌ மாவட்ட குடிநீர்‌ பற்றாக்குறையைப்‌ போக்க விரைவான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்‌ என மதிமுக பொதுச்செயலர்‌ வைகோ வலியுறுத்தியுள்ளார்‌.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- தென்காசி மாவட்டத்தில்‌ உள்ள சங்கரன்கோவில்‌, புளியங்குடி நகராட்சிகள்‌, திருவேங்கடம்‌ பேரூராட்சி மற்றும்‌ விருதுநகர்‌ மாவட்டத்தில்‌ உள்ள இராஜபாளையம்‌, சிவகாசி, திருத்தங்கல்‌ ஆகிய நகராட்சிப்‌ பகுதிகளுக்கு தாமிரபரணி ஆற்றிலிருந்து கூடுதலாக குடிநீர்‌ வழங்க வழிவகை செய்யும்‌ “சங்கரன்கோவில்‌ கூட்டுக்‌ குடிநீர்‌ அபிவிருத்தித்‌ திட்டம்‌ பகுதி -1” எனும்‌ திட்டத்திற்கு, தமிழக அரசால்‌ 30.01.2017 இல்‌ நிர்வாக உத்தரவு வழங்கப்பட்டு, 06.12.2017 முதல்‌ வேலைகள்‌ நடந்து வருகின்றன.

உலக வங்கி, தமிழ்நாடு நகர கட்டமைப்பு மேம்பாட்டு மையம்‌ மற்றும்‌ அம்ரூட்‌ திட்டத்தின்‌ கீழ்‌ ரூபாய்‌ 543 கோடி நிதி உதவியுடன்‌ இத்திட்டம்‌ வடிவமைக்கப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட ஐந்து நகராட்சிகள்‌ மற்றும்‌ ஒரு பேரூராட்சியைச்‌ சேர்ந்த 1,14,045 குடியிருப்புகளில்‌ வசிக்கும்‌ 4,35,150 பேருக்குக்‌ குடிநீர்‌ வழங்குவதை இலக்காகக்‌ கொண்ட இத்திட்டப்‌ பணிகள்‌ நிறைவுபெறும்‌ போது அனைத்து வீடுகளுக்கும்‌ குடிநீர்‌ இணைப்பு கிடைக்கப்‌ பெறும்‌ என்பது இத்திட்டத்தின்‌ இலக்கு ஆகும்‌.

இப்பகுதியில்‌ உள்ள பொதுமக்கள்‌ குடிநீர்‌ பற்றாக்குறை குறித்த தங்களின்‌ குமுறல்களை நடந்து முடிந்த சட்டமன்றத்‌ தேர்தலின்போது வேட்பாளர்களிடம்‌ காட்டியதை அறிய முடிந்தது. குடிநீர்‌ தட்டுப்பாடு நிலவும்‌ இப்பகுதியில்‌, திட்டட்‌ பணிகளை குறிப்பிட்ட கால அளவு நிர்ணயித்து விரைந்து முடிக்க, குடிநீர்‌ வடிகால்‌ வாரியத்திற்கு தக்க உத்தரவுகளைப்‌ பிறப்பிக்குமாறு தங்களை அன்புடன்‌ கேட்டுக்கொள்கிறேன்‌.

மேலும்‌ இத்திட்டத்தில்‌ பயன்பெறும்‌ திருவேங்கடம்‌ பேரூராட்சிக்கு உட்பட்ட செல்லபட்டி, கீழத்‌ திருவேங்கடம்‌, புதுப்பட்டி, ஆவுடையார்புரம்‌ ஆகிய நான்கு கிராமங்களுக்கும்‌ புதிய குடிநீர்‌ குழாய்கள்‌ அமைத்து, இத்திட்டத்தில்‌ கிடைக்கப்‌ பெறும்‌ தண்ணீரை வழங்கிடவும்‌ வேண்டுகிறேன்‌.

அதேபோல்‌, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர்‌ ஆகிய மாவட்டங்களில்‌ நான்‌ தேர்தல்‌ பரப்புரையில்‌ ஈடுபட்டபோது, தாமிரபரணி கூட்டுக்‌ குடிநீர்‌ திட்டங்கள்‌ மூலம்‌ பயன்பெறும்‌ பல கிராமங்களைச்‌ சேர்ந்த மக்கள்‌ தங்கள்‌ பகுதியில்‌ கடுமையான குடிநீர்‌ தட்டுப்பாடு நிலவுவதாக என்‌ கவனத்திற்குக்‌ கொண்டுவந்தனர்‌. அம்மக்களின்‌ குடிநீர்‌ பிரச்சினையைத்‌ தீர்க்க சிறப்பு கவனம்‌ செலுத்தி நடவடிக்கை எடுத்து உதவிடுமாறும்‌ கேட்டுக்கொள்கிறேன்‌.”

வாசுதேவநல்லூர்‌ சட்டமன்ற உறுப்பினர்‌ டாக்டர்‌ தி.சதன்‌ திருமலைக்குமார்‌, தென்காசி மாவட்டப்‌ பொறுப்பாளர்‌ தி.மு.இராசேந்திரன்‌ ஆகியோர்‌ திருச்சியில்‌ அமைச்சர்‌ கே.என்‌. நேரு அவர்களை நேரில்‌ சந்தித்து கழகப்‌ பொதுச்செயலாளர்‌ வைகோ அவர்களின்‌ கடிதத்தை வழங்கினார்கள்‌, எனக் கூறினார்.

Views: - 135

0

0