ஸ்ரீரங்கம் கோவில் யானைகளை மழையில் நனையவிட்டு வீடியோ எடுத்த விவகாரம் : பாகன்கள் மீது பக்தர்கள் புகார்!!!
Author: Udayachandran RadhaKrishnan22 August 2021, 3:43 pm
திருச்சி : ஸ்ரீரங்கம் கோவில் யானையை மழையில் நனையவிட்டு வீடியோ எடுத்த விவகாரம் குறித்து பாகன்கள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
108 வைணவ தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில் ஆண்டாள், லட்சுமி என்ற 2யானைகள் உள்ளன. இவற்றை பாகன்கள் ராஜேஷ், அப்பு, சரண் ஆகிய 3 பேர் பராமரித்து வருகின்றனர். இதில்
ராஜேஷ் சீனியர். இவரின் கீழ் அப்பு, சரண் ஆகியோர் வேலை செய்து வருகின்றனர்.
நேற்று முந்தினம் சமூக வலைத்தளத்தில் ஆண்டாள், லட்சுமி ஆகிய இரு யானைகளும் மழையில் நனைந்தவாறு பின்னால் சினிமா பாடலுடன் வீடியோ வெளியானது. இந்த வீடியோ அவர்களுக்குத் தெரிந்த சில மீடியா நபர்களுக்கு கொடுக்கப்பட்டு சேனல்களில் செய்தியாக வெளியானது.
கொரோனா நோய் தொற்று காரணமாக கடந்த சில நாட்களாக அனைத்து வழிபாட்டு தளங்களும் மூடப்பட்டு கோவிலில் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் யானைகளை வெளியே அழைத்து வந்து மழையில் நனைய வைத்து வீடியோ எடுத்தது யார் என பக்தர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டனர் விசாரணையில், பாகன் கோபி தான் யானைகளை வெளியே கொண்டு வந்து மழையில் நனைய வைத்து வீடியோ எடுத்து வெளியிட்டது என்பது தெரியவந்தது.
இந்த விவகாரம் தற்போது பக்தர்கள் மத்தியில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. பாகன்கள் கோவிலின் முறைக்காக யானைகள் அழைத்து வர வேண்டும். பின்னர் அதே இடத்தில் கட்டப்பட வேண்டும்.
ஆனால் அதிகாரிகளின் அனுமதி இல்லாமல் யானைகளை பாகன்கள் தங்களது இஷ்டத்திற்கு வெளியே அழைத்து வந்து மழையில் நனைய விட்டு வீடியோ எடுத்துள்ளனர்.
இது இச்சம்பவம் குறித்து அதிகாரிகள் முழுமையாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை தற்போது எழுந்துள்ளது.
0
0