ஸ்டாலின் புதிய நாடகத்தை போடத் துவங்கி விட்டார்: பிரச்சாரத்தில் முதலமைச்சர் சுவாரசியம்!!

24 January 2021, 10:15 am
Cbe CM- Updatenews360
Quick Share

கோவை : தி.மு.க தலைவர் ஸ்டாலின் புதிய நாடகத்தை தொடங்கி போடத் துவங்கி விட்டார் என்றும், தேர்தல் வந்தால் அத்தனை நாடகமும் போடும் ஒரு நடிகர் ஸ்டாலின் என்றும் கோவை சிங்காநல்லூரில் நடைபெற்ற பிரச்சாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரண்டு நாள் பயணமாக கோவை வந்துள்ளார். அதன்படி இன்று காலை புளியகுளம் விநாயகர் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு சிங்காநல்லூரில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

முதலமைச்சர் வருகையையொட்டி சிங்காநல்லூர் பேருந்து நிலையம் முன்பு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டனர். மேளதாளம் முழங்க முதலமைச்சருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

பிரச்சாரத்தில் முதலமைச்சர் பேசியதாவது: ஸ்டாலின் தற்போது புதிய நாடகம் ஒன்றை போட துவங்கிவிட்டார். இறை பக்தி இருந்தால் தான் அருள் கிடைக்கும். நாடகம் போட்டால் இறைவன் சரியான தீர்ப்பை வழங்குவார். தேர்தல் வந்தால் அத்தனை நாடகமும் போடும் ஒரு நடிகர் ஸ்டாலின்.

வடநாட்டில் இருந்து வந்திருக்கும் பிரசாந்த் கிஷோர் தான் டைரக்டர். ஏற்கனவே கோவையிலும் ஒரு நாடகத்தை அரங்கேற்றினார். ஆனால் அது கை கொடுக்கவில்லை. போகுமிடத்தில் எல்லாம் பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டுப் போகிறார். மக்களை ஏமாற்றி முதல்வர் கனவு காண வேண்டாம்.

திமுக ஆட்சிக்கு வந்தால் அராஜகம் தலைவிரித்து ஆடும். இந்தியாவிலேயே அமைதிப் பூங்காவாக இருக்கும் மாநிலம் தமிழ்நாடு தான். நம் மாநிலம் தொழில் துவங்க உகந்த மாநிலம் என்று தொழிலதிபர்கள் முடிவுசெய்து தமிழகம் நோக்கி வருகின்றனர். சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

இதனால் தான் தொழில்துறையினர் தமிழகம் நோக்கி வருகின்றனர். 13 ஆண்டு காலம் மத்தியில் கூட்டணி வைத்து ஆட்சி செய்தது திமுக. அப்போது என்ன நல்லது செய்தது.? அவர்கள் குடும்பம் மட்டும் தான் வளர்ந்தது. அதிமுக ஆட்சியில் கோவையில் பிரம்மாண்ட பாலங்கள் அமைத்துக் கொடுத்திருக்கிறோம். கூட்டு குடிநீர் வசதி, புதிய கல்லூரி உள்ளிட்ட பல திட்டங்களை கோவைக்கு கொடுத்திருக்கிறோம்.

திமுக ஆட்சியில் என்ன திட்டம் கொண்டு வந்தார்கள்? திமுக தலைவர் டெல்லிக்குச் என்றால் மகனுக்கு மகளுக்கு பேரனுக்கு என்று பதவிக்காக செல்வார்கள். திமுக என்ற தீய சக்தியை ஒழிக்கவே எம்ஜிஆர்., அதிமுக.,வை தோற்றுவித்தார்.

அதிமுக அரசு அனைத்து துறைகளிலும் தேசிய விருதுகளை வாங்கி வருகிறது. உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நூற்றுக்கும் மேற்பட்ட விருதுகளை வாங்கியுள்ளார். ஸ்டாலின் எந்த தேசிய விருதை வாங்கினார் ?

Views: - 0

0

0