மக்களின் கேள்விகளுக்கு பயந்தே ஸ்டாலின் நேரில் பிரச்சாரம் செய்வதில்லை : பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சனம்

Author: kavin kumar
14 February 2022, 11:05 pm
Quick Share

கோவை : மக்களின் கேள்விகளுக்கு பயந்தே நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் பிரச்சாரம் செய்வதில்லை என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

1998 ஆம் ஆண்டு கோவை குண்டுவெடிப்பில் உயிர் இழந்தவர்களுக்கு 24 ஆம் ஆண்டு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஆர்.எஸ் புரம் பகுதியில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் பாரத மாதா திருவுருவப் படத்துடன், அமைக்கப்பட்டிருந்த குண்டு வெடிப்பில் உயிர் இழந்தவர்களின் புகைப்படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து குண்டுவெடிப்பில் உயிரிழந்த பொதுமக்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. பின்னர் மேடையில் பேசிய கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் வானதி சீனிவாசன், கோவை மாநகராட்சியில் பாஜக வேட்பாளர்கள் வெல்லும் போது குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு இதே பகுதியில் நினைவுத்தூண் வைக்கப்படும் என்றார்.

தொடர்ந்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசுகையில், “இந்து என்பது வாழ்வியல் முறை எனவும், பிற சமூக மக்களின் வாக்குகளை பெறுவதற்காக சிலர் இந்து மதத்தை தவறாக சித்தரிக்கின்றனர் எனவும் குற்றம் சாட்டினார். திமுக ஆட்சி அமைந்த பிறகு தமிழகத்தில் கோவில்கள் இடிக்கப்படும் நிலை உள்ளதாக கூறிய அவர், கடந்த 8 மாத கால திமுக அரசு அனைத்து மதங்களுக்குமான அரசாக இல்லை என தெரிவித்தார். தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் தமிழக அரசு முழு பலத்தையும் பயன்படுத்தி மறைக்க முயற்சிப்பதாகவும், உத்தரபிரதேச மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள சூழலில் ஹிஜாப் விவகாரத்தை உழைத்து தமிழகம் மற்றும் கர்நாடகத்தில் அரசியல் நடைபெறுகிறது எனவும் அவர் கூறினார்.

குடியரசு தின ஊர்தி விவகாரத்தில் பாரதியார், வேலுநாச்சியார் மற்றும் கட்டபொம்மன் உள்ளிட்ட சுதந்திரப் போராட்ட வீரர்களின் பெயர்களை முதலமைச்சர் ஸ்டாலின் உச்சரித்தது திமுகவில் இருந்து வந்துள்ள மாற்றம் எனவும், முதலமைச்சர் சொன்னதுபோல மக்கள் இருக்கும் இடங்களுக்கு ஊர்தி வரவில்லை எனவும் கூறிய அண்ணாமலை, கோவை மாநகராட்சியை பாஜக கைப்பற்றும் போது குண்டு வெடிப்பு நினைவுச்சின்னம் அமைக்கப்படும் எனவும் தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறுகையில், “திமுக ஆட்சியில் இரவில் நோட்டீஸ் கொடுத்து காலை கோவில்களை இடிக்கும் சூழல் உள்ளது எனவும்,

மக்களை ஏமாற்றுவதற்காக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜகவும் அதிமுகவும் தனித்தனியே போட்டியிடுவதாக காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் ரமேஷ் சென்னிதலா கூறிய கருத்துக்கு பதில் அளித்த அண்ணாமலை, காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தமிழகம் பற்றி தெரியாமல் பேசுவதாகவும், கூட்டணியில் காங்கிரஸ் கட்சி செல்போன் எண்கள் போல குறைந்த வேட்பாளர்களை நிறுத்தி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். கோவையில் கரூர் மாடலில் பொருட்களைக் கொடுத்து திமுக வாக்கு சேகரித்து மக்களை ஏமாற்ற முயற்சிக்கிறது எனவும், அயன் பாக்ஸ், கொலுசு கொடுக்கும் திட்டங்களை திமுகவினர் இன்னும் சில நாட்களில் நிறைவேற்றுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் இந்து முன்னனி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் உட்பட பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Views: - 423

0

0