புதுச்சேரி மாநிலங்களவை பாஜக வேட்பாளராக முன்னாள் நியமன எம்.எல்.ஏ. செல்வகணபதி அறிவிப்பு

Author: Udhayakumar Raman
21 September 2021, 11:52 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலங்களவை பாஜக வேட்பாளராக முன்னாள் நியமன எம்.எல்.ஏ. செல்வகணபதி அறிவிக்கப்பட்டுள்ளார்.

புதுச்சேரி சட்டசபை தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் 10 இடங்களிலும் பாஜக 6 இடங்களிலும் வென்றது. இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தன. ஆனால் ஆட்சி அமைத்த நாளிலிருந்தே பாஜகவுக்கும்- என்.ஆர்.காங்கிரஸ்க்கும் இடையே மோதல் தொடங்கியது, முதலமைச்சர் பதவி தொடங்கி அமைச்சரவை வரை அனைத்துமே இழுபறிக்கு பின்னரே முடிவுக்கு வந்தது. அதன்பின் காலியாக உள்ள ஒரு மாநிலங்களவை எம்பி பதவியை தங்களுக்கு ஒதுக்கக்கோரி, பாஜக எம்எல்ஏக்கள் ரங்கசாமியிடம் கோரினார். இதற்கு மறுப்பு தெரிவித்த, ரங்கசாமி என் ஆர் காங்கிரஸ் கட்சி வேட்பாளரை நிறுத்த முடிவு செய்தார். இந்த பரபரப்பான சூழ்நிலையில் பாஜக அமைச்சர் நமச்சிவாயம், டெல்லி சென்று மேலிட தலைவர்களை சந்தித்து எம்பி பதவியை பாஜகவுக்கு ஒதுக்கக்கோரி காய்களை நகர்த்தினார்.

இதனிடையே தனியார் ஓட்டலில் என் ஆர் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்களுடன் அக்கட்சி தலைவரும் முதலமைச்சருமான ரங்கசாமி ஆலோசனை நடத்தினார். அப்போது பாஜகவின் அழுத்தத்துக்கு பணிந்து பாஜகவுக்கு மாநிலங்களவை இடத்தை விட்டுத்தர என்.ஆர். காங்கிரஸ் முடிவு செய்ததாக தெரிகிறது. இந்நிலையில் மாநிலங்களவை பாஜக வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ.செல்வகணபதியை நியமித்து பாஜக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 2017 ம் ஆண்டு ஜூன் 3 ம் தேதி முதல் 2021 மே 2ம் தேதி வரை பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற நியமன உறுப்பினராக இருந்தவர் செல்வகணபதி என்பது குறிப்பிடதக்கது.

Views: - 284

0

0