ஸ்டெர்லைட் ஆலை கழிவுகளை அகற்றும் வழக்கு: தமிழக அரசு, வேதாந்தா பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

Author: kavin kumar
17 August 2021, 8:31 pm
Quick Share

சென்னை: ஸ்டெர்லைட் ஆலையில் கொட்டப்பட்டுள்ள கழிவுகளை அகற்ற உத்தரவிடக் கோரிய வழக்கில் தமிழ்நாடு அரசும், வேதாந்தா நிறுவனமும் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையால் சுற்றுச்சூழல் மற்றும் நிலத்தடி நீர் பாதிப்பதாக பொதுமக்கள் போராட்டம், அவர்கள் மீதான துப்பாக்கி சூட்டை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு மூடி உத்தரவிட்டது. இந்நிலையில் ஆலை வளாகத்தில் உள்ள கழிவுகளை அகற்ற உத்தரவிடக் கோரி பேராசிரியர் பாத்திமா தாக்கல் செய்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் கூடுதல் மனுதாக்கல் செய்ய மனுதாரருக்கு அனுமதி அளித்த நீதிபதிகள், மனுவிற்கு தமிழ்நாடு அரசும் மற்றும் வேதாந்தா நிறுவனமும் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 5 வாரங்களுக்கு தள்ளிவைத்தார்.

இதற்கிடையில், ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு நிலம் ஒதுக்கீடு செய்ததை ரத்து செய்து தமிழ்நாடு அரசு பிறபித்த உத்தரவை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்திருந்த வழக்கும் தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வேதாந்தா நிறுவனம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஏற்கனவே ஆலையை மூட வேண்டும் என்று கொள்கை முடிவு எடுத்து அரசு பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும், இதை எதிர்த்து தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் இந்த வழக்கை தள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி அமர்வு, வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த வழக்கை 6 மாதங்களுக்கு தள்ளி வைத்தனர். மேலும், உச்ச நீதிமன்றம் எந்த உத்தரவு பிறபித்தாலும், அதுசம்பந்தமாக முறையீடு செய்து, வழக்கை முன்கூட்டியே பட்டியலிட கோரிக்கை வைக்க வேதாந்தா நிறுவனத்திற்கு அனுமதி அளித்தும் உத்தரவிட்டனர்.

Views: - 206

0

0