மதுரையில் இதய நோயாளிகளுக்கான இஇசிபி சிகிச்சை நிறுத்தம் : நோயாளிகள் பரிதவிப்பு

Author: kavin kumar
14 February 2022, 5:28 pm
Quick Share

மதுரை : மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நிறுத்தப்பட்ட இஇசிபி சிகிச்சை முறையை மீண்டும் கொண்டு வர வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியரிடம் நோயாளிகள் மனு அளித்துள்ளனர்.

தென்தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனை மிக முக்கியமான ஒன்றாக விளங்கி வருகிறது. நாள்தோறும் அரசு இராஜாஜி மருத்துவமனைக்கு ஆயிரக்கணக்கானோர் வெளிநோயாளிகளாக பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற வருகின்றனர். குறிப்பாக தேனி, திண்டுக்கல், இராமநாதபுரம், சிவங்கை உள்ளிட்ட பல மாவட்டங்களிருந்தும் பொதுமக்கள் சிகிச்சைக்காக வருகின்றனர். மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் இதயவியல், எலும்பியல், நுரையீரல் சிகிச்சை, மகேப்பேறு மருத்துவம், குழந்தை நல சிகிச்சை மையம், பால்வினை நோய்கள், புற்றுநோய் என ஒவ்வொரு சிகிச்சைக்கும் தனித்தனி வளாகங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இஇசிபி எனும் ரத்த நாள அடைப்பு நீக்க சிகிச்சை முறை கடந்த 2016-ம் ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்டு ஏழை நோயாளிகளுக்காக மருத்துவ சேவை வழங்கப்பட்டு வருகிறது. இஇசிபி சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகளில் சற்றேறக்குறைய ரூபாய் ஒரு லட்சம் முதல் ஒன்றரை லட்சம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் வழங்கப்படும் இந்த சிகிச்சை ஏழை நோயாளிகளுக்கு முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் வழங்கப்படுவதால் மிக பயனுள்ள ஒன்றாகும். இச்சிகிச்சையின் மூலம் இதுவரை 400க்கும் மேற்பட்ட நோயாளிகள் பயன் அடைந்துள்ளனர்.

இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதியிலிருந்து இச்சிகிச்சை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நிறுத்தப்பட்டு விட்டதாக பாதிக்கப்பட்ட நோயாளிகள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் இஇசிபி சிகிச்சை முறையை மீண்டும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கொண்டு வர வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியரிடம் நோயாளிகள் மனு அளித்துள்ளனர். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நோயாளிகள் பேசுகையில், இதய பலகீனம் உள்ள நோயாளிகளுக்கு இஇசிபி சிகிச்சைமுறை வரப்பிரசாதமாகும். அதிக செலவு பிடிக்கும் இச்சிகிச்சையை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை இதுவரை மேற்கொண்டு வந்தது.

ஆனால் தற்போது என்ன காரணத்தினாலோ இதனை நிறுத்தி விட்டதாக கூறுகிறார்கள். இதனால் எங்களைப் போன்ற ஏழை நோயாளிகள் கடுமையாக பாதிப்பிற்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது ஆகையால் தமிழக அரசும் மதுரை மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு இஇசிபி சிகிச்சை முறையை மீண்டும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கொண்டு வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தற்போது இந்த சிகிச்சைக்காக ஏறக்குறைய 18 பேர் மதுரையிலும் சற்று ஏறக்குறைய நூற்றுக்கும் மேற்பட்டோர் தமிழகம் முழுவதும் உள்ள பிற அரசு மருத்துவமனைகளிலும் காத்திருக்கிறார்கள் எனக் கூறப்படுகிறது. ஆகையால் உயிர்காக்கும் இந்தப் பிரச்சனையில் தமிழக அரசின் சுகாதாரத்துறை உடனடியாக தலையிட்டு ஏழை நோயாளிகளின் உயிரை காப்பாற்ற முன்வர வேண்டும் என சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Views: - 438

0

0