நீட் தேர்வு எழுத ஆதார் அட்டையை மறந்த மாணவி : கடவுள் போல் உதவிய காவலர்!!

14 September 2020, 1:14 pm
Police Help Neet Student- updatenews360
Quick Share

சென்னை : நீட் தேர்வு மையத்துக்கு தேர்வு எழுத வந்த மாணவி ஆதார் அட்டை மறந்ததால் உடனடியாக காவலர் ஒருவர் உதவி செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை புரசைவாக்கத்தை சேர்ந்த மாணவி மௌனிகா, திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பெரவாயல் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நேற்ந நீட் தேர்வு எழுத சென்றிருந்தார்.

தேர்வு மையத்தில் அசல் ஆதார் அட்டை காண்பிக்க வேண்டும், ஆனால் இவர் அசல் ஆதார் அட்டையை எடுத்து செல்லாமல் நகலை மட்டும் எடுத்து சென்றுள்ளார். இதையடுத்து மௌனிகாவை தேர்வு மையத்தில் தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டது.

மேலும் ஆதார் எண்ணுடன் செல்போன் எண் இணைக்கப்படாததால் இணைய வழியாக அசல் ஆதார் அட்டையை பதிவிறகக்கம் செய்ய முடியவில்லை. தேர்வுக்கு இன்னும் இரண்டு மணி ரேநம் மட்டும் இருந்த நிலையில் வீட்டிற்கு மீண்டும் சென்று எடுத்து வருவது இயலாது என்பதை அறிந்த மாணவி மற்றும் அவரது தாய் அழுது புலம்பினர்.

இந்த நிலையில் இதைக் கண்ட கும்மிடிபூண்டி டிஎஸ்பி ரமேஷ், உடனே ஆரம்பாக்கம் போலீஸ் நிலைய காவலர் மகேஷ்வரனை உதவிக்கு அனுப்பினார். உடனே மகேஷ்வரன் தனது இருசக்கர வாகனத்தில் மாணவியின் தாயை ஏற்றிக்கொண்டு புரசைவாக்கம் சென்றார்.

பின்னர் மாணவியின் ஆதார் அட்டையை எடுத்துக் கொண்டு மீண்டும் புரசைவாக்கத்தில் இருந்து தேர்வு மையத்திற்கு புறப்பட்டார் மகேஷ்வரன். பிற்பகல் 2 மணிக்கு தேர்வு தொடங்க இருந்த நிலையில், அரை மணி நேரத்திற்கு முன்பாகவே ஆதார் அட்டையை மாணவியிடம் ஒப்படைத்தார்.

இதையடுத்து மகிழ்ச்சியுடன் தேர்வை எழுதி வந்த மாணவியையும், அவரது தாயையும் கார் மூலம் வீட்டிற்கு அழைத்து செல்ல ஏற்பாடு செய்தார். ஆனால் அந்த காரின் பின்னாடியே தனது இருசக்கர வாகனத்தில் காவலர் சென்றுள்ளார்.

மேலும் இது குறித்து பேசிய காவலர் மகேஷ்வரன், ஏழை குடும்பத்தில் இருந்து நீட் தேர்வு எழுதி இருந்து மருத்துவராக வேண்டும் என்பதை மாணவியின் நிலையை கண்டு புரிந்து இந்த சேவையை செய்தேன் என்றும், அவருக்கு ஆதார் அட்டையை தேர்வு எழுதும் முன்பு ஒப்படைக்க வேண்டும் என நினைத்தேன், மேலும் பத்திரமாக வீட்டிற்கு அனுப்ப ஏற்பாடு செய்து என்னால் முடிந்த வரை உதவினேன் என கூறியுள்ளார்.

Views: - 7

0

0