மாணவிகள் டிபன் பாக்ஸ் கழுவினால் ரூ.500 அபராதம்.. அரசு பள்ளி வாட்டர் டேங்கில் எழுதப்பட்ட வாசகம் : பெற்றோர்கள் அதிர்ச்சி!

Author: Udayachandran RadhaKrishnan
19 September 2023, 11:26 am

மாணவிகள் டிபன் பாக்ஸ் கழுவினால் ரூ.500 அபராதம்.. அரசு பள்ளி வாட்டர் டேங்கில் எழுதப்பட்ட வாசகம் : பெற்றோர்கள் அதிர்ச்சி!

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த மாரண்டஅள்ளி அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளியில் சுமார் 1200க்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

இந்த பள்ளியில் அடிப்படை வசதிகளான குடிநீர், கழிவறை, விலையில்லா தானியங்கி மின் சானிட்டரி நாப்கின் எரியூட்டும் இயந்திரம் உள்ளிட்ட வசதிகள் இருந்தும் பராமரிப்பு இல்லாத காரணத்தால் மாணவிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.

குறிப்பாக கழிவறைகளில் தண்ணீர் இல்லாததால் அருவருக்கத்தக்க வகையிலும், முகம் சுளிக்கும் வகையிலும் உள்ளது, தண்ணீர் இல்லாமல் தவித்து வரும் மாணவிகள் இயற்கை உபாதைகளை கழிக்க பெரும் சங்கடத்துக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர்.

அதேபோல மாணவிகள் பயன்படுத்தக்கூடிய குடிநீர் சின்டெக்ஸ் டேங்கில் புழு, பூச்சி, கொசு, பல்லி உள்ளிட்டவைகள் செத்து மிதப்பதை தெரியாமல் அதனையே குடித்து வரும் நிலையும் ஏற்பட்டு வருகின்றன.

இதுகுறித்து பள்ளி மாணவிகள் தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்தால் இதையெல்லாம் மாணவிகளாகிய நீங்கள் தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என அலட்சியமாக பதில் தெரிவிக்கிறாராம் இப்பள்ளின் தலைமை ஆசிரியை.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, வாட்டர் டேங்கில் பள்ளி மாணவிகள் டிபன் பாக்ஸ்களை கழுவினாலோ அல்லது முகம், கை, கால்களை கழுவினாலோ ரூபாய் 500 ரூபாய் அபராதம் என அந்த வாட்டர் டேங்கிலேயே உடற்கல்வி ஆசிரியர் எழுதியுள்ளார் எனவும் பள்ளி மாணவிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகும் மாணவிகள் படிப்பை சரியான முறையில் பயில்வதற்கு இந்த அடிப்படை வசதிகள் இல்லாதது ஒரு தடையாக உள்ளது.

எனவே பள்ளிக்கல்வித்துறை நிர்வாகம் பள்ளி மாணவிகளிடம் உரிய விசாரணை மேற்கொண்டு கழிவறைகள் சீரமைக்கவும் சரியான முறையில் சுத்தமான குடிநீர் வழங்கவும் சுகாதாரமற்ற வகையில் இருக்கும் சூழ்நிலைகளை மாற்றி அமைக்க வேண்டும் என பள்ளி மாணவிகளும் பெற்றோர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?