செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் திடீர் தீ விபத்து : புகையால் நோயாளிகள், ஊழியர்கள் அவதி!!

Author: Udayachandran RadhaKrishnan
26 September 2021, 5:46 pm
Chengalpet GH Fire -Updatenews360
Quick Share

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ ஆய்வகத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் கரும்புகையால் நோயாளிகள், ஊழியர்கள் பாதிக்கப்பட்டனர்.

செங்கல்பட்டு அரசு தலைமை மருத்துவமனையில் நாளொன்றுக்கு சுமார் 3000 பேர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இதில் உள்நோயாளியாக சுமார் 1200 பேர் தினந்தோறும் அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்த நிலையில் அவர்களுக்கு நவீன சிகிச்சை அளிக்கும் வகையில் புதிய கட்டிடத்தில் எம்ஆர்ஐ ஸ்கேன் மிஷின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இதன் காரணமாக நோயாளிகள் தனியார் ஆய்வகங்களை தவிர்த்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனையிலேயே எம்ஆர்ஐ ஸ்கேன் எடுத்து வந்தனர்.

இந்த நிலையில் திடீரென எம்ஆர்ஐ அறையிலிருந்து மின்கசிவு காரணமாக மளமளவென புகை வெளிவர தொடங்கியது. இதனையடுத்து அங்கிருந்த நோயாளிகள் அப்புறப்படுத்தப்பட்டனர்.

மேலும் கரும்புகை காரணமாக அவசர சிகிச்சை பிரிவு முற்றிலும் மூடப்பட்டது. பின்னர் அங்கு வந்த தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்தனர். புகை மூட்டம் காரணமாக ஊழியர்களுக்கும் மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் அங்கிருந்து அவர்களையும் அப்புறப்படுத்தினர்.

எம்ஆர்ஐ ஸ்கேன் கருவியில் பொருத்தப்பட்டுள்ள பேட்டரியில் மின்கசிவு ஏற்பட்டு தீ விபத்து நடந்துள்ளதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர். இந்த தீ விபத்து காரணமாக சிறிது நேரம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.

Views: - 124

0

0