தாய், மகன்,மகள் திடீர் மர்ம மரணம் : வீட்டின் முன் கூடிய கிராம மக்கள்.. காரணம் என்ன?

Author: Udayachandran RadhaKrishnan
26 September 2021, 4:17 pm
3 Suicide - Updatenews360
Quick Share

திண்டுக்கல் : நிலக்கோட்டை அருகே தாய், மகன், மகள் 3பேர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்த கொண்ட சம்பவம் கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள கரியாம்பட்டி யைச் சேர்ந்த சந்திரபோஸ் (வயது 40). இவர் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு முருகேஸ்வரி (வயது 35) என்ற மனைவியும் சந்தோஷ் (வயசு 15) என்ற மகனும், சௌந்தர்யா (வயது 13) என்ற மகளும் உள்ளனர்.

முருகேஸ்வரி சிலுக்குவார்பட்டி ஊராட்சி பகுதிகளில் 100 நாள் வேலை செய்யும் பணிக்கு செல்வது உண்டு. சந்தோஷ் சிலுக்குவார்பட்டி தனியார் பள்ளியில் 10 ம் வகுப்பு படித்து வருகிறான். சௌந்தர்யா 7 ம் வகுப்பு கரியாம்பட்டியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வருகிறார்.

இந்நிலையில் சந்திரபோஸ் காலை வழக்கம்போல் காய்கறி வியாபாரத்திற்கு நிலக்கோட்டை பகுதிகளில் உள்ள கிராமங்களில் விற்கச் சென்றுள்ளார். அப்போது அவசரமாக வியாபாரத்திற்கு சென்றபோது காய்கறி எடைபோடும் தராசை வீட்டில் வைத்து விட்டுப் சென்று விட்டதாக கூறப்படுகிறது.

பின்னர் தனது மகன் சந்தோஷுக்கு போன் செய்து காய்கறி எடைபோடும் தராசைக் எடுத்து வந்து கொடுத்து விட்டு செல்லுமாறு கூறியுள்ளார். சந்தோஷ் நேராகச் சென்று தனது தந்தையிடம் தராசை கொடுத்து விட்டு வீட்டிற்கு வந்தான்.

பின்னர் அங்கு இருந்த உறவினர்களிடம் விளையாட்டுத்தனமாக பேசிக் கொண்டு உள்ளார்கள். இதை அப்பகுதியில் பார்த்த அக்கம்பக்கத்தினர் தெரிவிக்கிறார்கள். இந்நிலையில் திடீரென 3 பேரும் வீட்டை பூட்டி கொண்டு வீட்டின் மேற்புறம் அமைத்துள்ள மின் விசிறி கொக்கியில் கயிற்றால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகள், மகன் 3 பேரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் காட்டுத்தீ போன்று பரவி ஒட்டுமொத்த கிராமமே வீட்டின் முன்பு சோகமாக கூடி நின்று கதறி அழுதனர்.

நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் குரு வெங்கட்ராஜ் தலைமையில் போலீசார் விரைந்து சென்று 3 பேர் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் மர்மமான முறையில் பட்டப்பகலில் திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 412

0

0