மாடியில் இருந்து குதிக்க போவதாக மாற்றுத்திறனாளி தற்கொலை மிரட்டல் : ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு!!
Author: Udayachandran RadhaKrishnan4 October 2021, 3:56 pm
மதுரை : ஆட்சியர் அலுவலகத்தின் மொட்டை மாடியில் இருந்து தற்கொலை செய்து போவதாக மிரட்டல் விடுத்த இருகைகளை இழந்த மாற்றுத்திறனாளியை தீயணைப்புத்துறையினர் மீட்டனர்.
மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள எம்.சுப்புலாபுரத்தை சேர்ந்த 24 வயது இளைஞர் ராம்குமார் என்பவர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் 3வது மாடியின் இருந்து தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டல் விடுத்தார்.
இதையடுத்து உடனடியாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 4வது மாடிக்கு சென்ற தீயணைப்புத்துறையினர் ராம்குமாரிடம் பேச்சுவார்த்தை நடத்தி மீட்டு கீழே அழைத்து வந்தனர்.
மாவட்ட ஆட்சியர் உத்தரவின பேரில் காவல்துறையினர் ராம்குமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையில், இரண்டறை ஆண்டுகளுக்கு முன் பணியின் போது மின்சாரம் தாக்கியதால் இரு கைகளையும் இழந்த ராம்குமாருக்கு 1 ஆண்டுக்கு முன்னர் தனது உறவினர் மூலம் தூத்துக்குடி மாவட்டம் கடம்பூரை சேர்ந்த பிரவீனா என்கிற பெண் அறிமுகம் ஆனார்.
பிரவீனா ஆன்லைனில் வழியே ட்ரேடிங் செய்வதாகவும், பணம் கொடுத்தால் பன்மடங்குடன் திருப்பி தருவதாகவும் கூறியதால் 2 இலட்சத்து 52 ஆயிரம் ரூபாயை வழங்கி உள்ளார்.
தொடக்க காலத்தில் 36 ஆயிரம் ரூபாயை பிரவீனா வழங்கி உள்ளார் எனவும், பின்னர் பணம் வழங்கவில்லை எனவும், பிரவீனாவிடம் பணத்தை திருப்பி கேட்ட போது ராம்குமார் மீது கடம்பூர் காவல் நிலையத்தில் கந்துவட்டி கேட்டு மிரட்டுவதாக பிரவீனா கொடுத்த புகாரின் அடிப்படையில் ராம்குமார் மீதும், ராம்குமார் உறவினர் மீதும் கந்துவட்டி வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதனால் ராம்குமாரும், அவரது குடும்பத்தாரும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளதாகவும், ராம்குமார் பணத்தை திரும்ப பெற்று தருவதோடு பிரவீனா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை விடுத்தார்.
0
0