திருச்செந்தூர் முருகன் கோவிலில் நாளை சூரசம்ஹாரம்: பக்தர்களுக்கு அனுமதி இல்லை…!!

19 November 2020, 3:26 pm
thiruchenthur - updatenews360
Quick Share

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழாவில் நாளை நடைபெற உள்ள சூரசம்ஹார விழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பல்வேறு விழாக்களில் கந்தசஷ்டி திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும்.

திருச்செந்தூர் முருகன் கோவிலில் இந்த ஆண்டு கந்தசஷ்டி திருவிழா கடந்த 15ம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழா நாட்களில் தினமும் காலையில் யாகசாலை பூஜை நடைபெற்றது. மதியம் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் உள்பிரகாரத்தில் உள்ள 108 மகாதேவர் சன்னதி முன்பு எழுந்தருளினார்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சூரசம்ஹாரம், 6ம் திருநாளான நாளை நடைபெறுகிறது. அன்று அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடக்கிறது. 7ம் திருநாளான நாளை மறுநாள் இரவில் சுவாமி-தெய்வானை அம்பாள் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.
முக்கிய விழா நாட்களான 6, 7ம் திருநாட்களில் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் யு-டியூப் இணையதளத்தில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. சூரசம்ஹாரத்தை முன்னிட்டு, கோவிலுக்கு பக்தர்கள் வருவதை தடுக்கும் வகையில், கோவில் வளாகம், கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் தடுப்பு கம்புகள் மற்றும் தகரத்தால் அடைக்கும் பணி நடைபெற்றது.

Views: - 0

0

0