தயாரிப்பாளர்கள், திரையரங்கு உரிமையாளர்களுடன் விரைவில் பேச்சுவார்த்தை : அமைச்சர் கடம்பூர் ராஜு….

9 November 2020, 2:12 pm
Minister Kadamboor Raju - Updatenews360
Quick Share

தூத்துக்குடி : விபிஎப் பிரச்சினை குறித்து தயாரிப்பாளர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர் அழைத்து விரைவில் அரசு பேச்சுவார்த்தை நடத்தும் என அமைச்சர் கடம்பூர் செ ராஜூ உறுதியளித்தள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்திற்கு நாளை மறுநாள் (11ந்தேதி) தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கொரோனா தடுப்பு பணிகள் ஆய்வுக்காக வருகை தர உள்ளார். முதலமைச்சர் வருகை குறித்தும், முதல்வருக்கு வரவேற்பு கொடுப்பது தொடர்பான அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் வரை அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் அதிமுக வடக்கு மாவட்ட செயலாளரும் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சருமான கடம்பூர் ராஜு கலந்து கொண்டு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இதன் பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களிடம் பேசுகையில் தமிழகத்தில் 7 மாதங்களுக்கு பிறகு திரையரங்குகள் நாளை முதல் திறக்கப்பட உள்ளது. இந்த நேரத்தில் விபிஎப் கட்டணம் தொடர்பான பிரச்சனை உகந்தது அல்ல என்றும், கால அவகாசம் குறைவாக உள்ளதால் தற்போது புதிய திரைப்படங்களை வெளியிட தயாரிப்பாளர்கள் அனுமதிக்க வேண்டும், விபிஎப் தொடர்பாக திரையரங்கு உரிமையாளர்கள் தயாரிப்பாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமாக முடிவு ஏற்பட்டால் அது மகிழ்ச்சியான விஷயம்,இல்லையென்றால், முதல்வரின் அனுமதி பெற்று இரு தரப்பினரையும் அழைத்து பேசி சுமூக தீர்வு காண்பதற்கு அரசு ஏற்பாடு செய்யும் என்றும் தெரிவித்தார்.

இலங்கைப் படையினரால் தமிழக மீனவர்கள் பாதிக்கப்படும்போது, மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுத்து மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் தமிழகஅரசு மீட்டு வந்துள்ளது. அதேபோன்று தமிழக மீனவர்களின் படகுகளை அழிக்க இலங்கை அரசு முடிவு செய்திருப்பதாக வந்த தகவலையும் முதல்வர் மத்திய அரசின் கவனத்திற்கு கடிதம் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ உரிய அழுத்தத்தைக் கொடுத்து தீர்வு காண்பார் என்றும் கூறினார்.

யார் முதல்வர் என்பதை தீர்மானிப்பது மக்கள்தான்,வரும் சட்டமன்ற தேர்தலில் அதிகமான உறுப்பினர்கள் எங்களுக்கு தேர்ந்தெடுக்கப்படும் போது நாங்களே முதல்வரை தேர்ந்தெடுத்து கொள்வோம்,எங்கள் முதல்வர் வேட்பாளரை ஏற்கனவே நாங்கள் அறிவித்து விட்டோம்,பாஜக தலைவர் முருகன் அவரது ஆசையை அவர் கூறுகிறார். தேர்தலில் பாஜகவினர் சுறுசுறுப்பாக வேலை செய்வதற்காக அவ்வாறு கூறியிருக்கலாம் என்றும் தெரிவித்தார்.

சிறு சிறு கட்சிகள் கூட நாங்கள் தான் முதலமைச்சராக வெற்றி பெறுவோம், நாங்கள் தான் தேர்வு செய்வோம் என்று கூறுவார்கள் இதனை நாங்கள் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை, தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதல்வர் என்ற அறிவிப்போடு தேர்தலை சந்திக்கிறோம். இதற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு இருக்கிறது என்றும்,மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு, மக்கள்தான் எஜமானர்கள், மக்களின் உதவியோடு வெற்றி பெற்று மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பொறுப்பேற்பார் என்றார்.

Views: - 20

0

0