நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் : தொகுதி பங்கீடு குறித்து திமுகவுடன் பேச்சுவார்த்தை : கே.எஸ்.அழகிரி அறிவிப்பு…

Author: kavin kumar
26 January 2022, 11:10 pm

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடுகள் குறித்து உடனடியாகப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்து தொடர் நடவடிக்கைகளுக்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மூத்த காங்கிரஸ் தலைவர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் மற்றும் மாநில காங்கிரஸ் நிர்வாகிகளான துணைத் தலைவர்கள், செயலாளர்கள் ஆகியோர் அடங்கிய பொதுச் செயலாளர்கள், தேர்தல் பணிக் குழு அமைக்கப்பட்டிருக்கிறது.

இக்குழுவினர்கள் அந்தந்த மாவட்ட தி.மு.க. செயலாளர்களோடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடுகள் குறித்து உடனடியாகப் பேச்சுவார்த்தை நடத்துவார்கள். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆகியோர் அவரவர்கள் இருக்கும் மாவட்டங்களில் தேர்தல் பணிக்குழுவின் தலைமைப் பொறுப்பை ஏற்று, மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்களை ஒருங்கிணைத்து செயல்படுவார்கள்.மேலும், பிற மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் தலைமையில் இக்குழு செயல்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

  • Priyanka Deshpande cried Vijay TV Fame Shared கதறி அழுத பிரியங்கா தேஷ்பாண்டே… 2வது திருமணத்திற்கு பிறகு நடந்த சம்பவம்!